×

திரளான பக்தர்கள் தரிசனம் தமிழக தேர்தல் ஆணையருக்கு மனு கோயில் விழாவில் கலை நிகழ்ச்சி நடத்திட அனுமதி தரவேண்டும் இயல், இசை, நாடக நடிகர் சங்கம் வலியுறுத்தல்

மன்னார்குடி, மார்ச் 10: இயல், இசை நாடக நடிகர் சங்க தலைவர் தங்க கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ஜோதி மகாலிங்கம், பொருளாளர் பெரமையன் ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகுவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் விபரம்:மன்னார்குடியில் இயங்கி வரும் இயல், இசை நாடக நடிகர் சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் நாடக தொழிலையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். கோடை காலங்களில் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் எங்களது நாடகங்கள் நடைபெறுவது வழக்கம். அதில் கிடைக்கும் சொற்ப வருவாயின் மூலம் பல்வேறு சிரமங்களுக்கு இடையே எங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம்.

கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் மற்றும் அதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக நாடக தொழிலை நடத்த முடியாமல் நடிகர்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வந்தோம். தற்போது, சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் நாடகங்களை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. உரிய அனுமதி அளித்தால் மட்டுமே நாடகங்கள் நடத்த முடியும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. தொழில் நடத்த முடியாமல் போனால் ஏழை நாடக நடிகர்கள் குடும்பத்தினருடன் இறக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, எங்கள் வாழ்வாதார பிரச்னையில் தமிழக தேர்தல் ஆணையர் தலையிட்டு கிராமம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 5.30 மணி வரை நடைபெறுள்ள எங்கள் கலை விழாக்களுக்கு உரிய அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் நாடக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Science, Music and Drama Actors' Association ,Tamil Nadu ,Manu Koil festival ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...