விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண், அங்குள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் செவிலியரான அருந்ததி என்பவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இருவரும் செஞ்சி அடுத்த அனந்தமங்கலம் சிவன் கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். சில மாதங்களுக்குமுன்பு அங்கு சென்றபோது சமூகவலைதளம் மூலம் அறிமுகமான ஆதி (20) என்பவரை இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் ஆதி மூலமாக சென்னை கல்லூரி மாணவர் சந்துரு (20) என்பவரின் அறிமுகம் கிடைக்கப்பெற, நாளடைவில் சந்துருவும், கல்லூரி மாணவியும் காதல் வலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அனந்தமங்கலத்தில் கோவில் அருகிலுள்ள முட்புதரில் இளம்ஜோடி தனியாக சந்தித்து பேசியுள்ளது. பின்னர் சந்துருவுடன் தான் நெருக்கமாக இருந்ததைப் பற்றி தனது தோழி அருந்ததியிடம் மாணவி உளறியுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அருந்ததி, நீயும் சந்துருவும் தனிமையில் நெருக்கமாக இருந்ததை ஆதியும், சந்துருவும் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்கள், அதனை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டுகின்றனர். எனவே அவர்களுக்கு பணத்தை கொடுத்து சரிசெய்து விடலாம் என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வீட்டில் பாட்டி வைத்திருந்த ரூ.3.5 லட்சத்தை திருடி எடுத்து வந்து அருந்ததியிடம் கொடுத்து, தனது வீடியோ வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனிடையே வீட்டில் வைத்திருந்த பணம் மாயமாகவே குடும்பத்தினர் விசாரித்தபோது உண்மையை மறைத்த அம்மாணவி, பயத்தில் பிபி மாத்திரையை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார், ஜிப்மருக்கு சென்று தற்கொலைக்கு முயன்ற மாணவியிடம் முதல்கட்ட விசாரணை நடத்தினர். அதில் மாணவியை மிரட்டிப் பணம் பறித்த விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் புகாரை பெற்று, பண மோசடியில் ஈடுபட்டதாக தோழி அருந்ததி, காதலன் சந்துரு, ஆதி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
