பொதுமக்கள் அச்சம் முதல்வர் அறிவித்த 6 சிலிண்டர் இலவசம் பொய்யான வாக்குறுதி, ஏமாற்று வேலை

திருச்சி, மார்ச் 10: திருச்சி சிறுகனூரில் கடந்த 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக சிறப்பு பொதுக்கூட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 7 பிரகடனங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மறுநாள் (8ம் தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெண்களுக்கு மாதம் ரூ.1,500 மற்றும் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு தேர்தலுக்கான மோசடி அறிவிப்பு என்பதும், ஆட்சியில் இருக்கும் போது அறிவிக்காமல் தேர்தலுக்காக அறிவித்தது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கடந்த 2 மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை 6 முறை உயர்த்தப்பட்டது. விலை ஏற்றத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். பெயரளவிற்கு கூட அதுகுறித்து அதிமுக வாய்திறக்கவில்லை. தற்போது 6 சிலிண்டர் இலவசம் என அறிவித்ததும் ஓட்டு வாங்குவதற்கு ஏமாற்றுவேலை என பெண்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து துறையூர் சிங்களாந்தபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி கூறுகையில், தற்பொழுது உள்ள பொருளாதார சூழ்நிலையில் இது சாத்தியமல்ல, தேர்தல் வாக்குறுதி எனக்கூறி ஐந்து வருடத்தில் தமிழ்நாட்டை கடனில் மூழ்க அடித்தது போதவில்லையா. ஏன் தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதி கூறவேண்டும். சிலிண்டர் மானியத்தை குறைக்க முடியாத அரசு எப்படி 6 சிலிண்டர் தரமுடியும். பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் குடும்பத் தலைவிக்கு வேலைவாய்ப்பை உருவாக்காமல் மேலும் கடன் சுமையை சுமக்க வைக்கும் வாக்குறுதி வேண்டாம் .இது போன்ற வாக்குறுதிகள் சாத்தியமல்ல, நம்ப வேண்டாம் என்றார். துறையூர் காளிப்பட்டியை சேர்ந்த கவிதா: அதிமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1500 ரூபாய் பணமும் 6 சிலிண்டர் எனக் கூறி இருப்பது சாத்தியமல்ல. முதியோர்களுக்கும் விதவைகளுக்கும் உதவித் தொகையை சரியான முறையில் வழங்க முடியவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க சொன்னதற்கு அரசால் குறைக்க முடியவில்லை. வீட்டு சிலிண்டர் மானியத்தை நிறுத்தி விட்டு தற்போது சிலிண்டர் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுகிறது. முதலில் அதை கட்டுப்படுத்துங்கள் பின்பு ஆறு சிலிண்டர் கொடுப்பதை பார்க்கலாம். வருடத்திற்கு 6 சிலிண்டர் என்பது இது சாத்தியமில்லாத தேர்தல் அறிக்கை என்றார்.

திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூரை சேர்ந்த கனகபுஷ்பம்:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்ததை பார்த்து, காப்பி அடித்து தான் தமிழக முதல்வர் குடும்பத் தலைவிக்கு ரூ.1500 வழங்கப்படும் என கூறியுள்ளார். தற்போது ஆட்சியில் உள்ள பொழுதே காஸ் சிலிண்டர்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது .இதனை கட்டுப்படுத்த ஆளும் மத்திய, மாநில கட்சிகள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியாக இலவசமாக வருடத்திற்கு 6 சமையல் காஸ் சிலிண்டர் தருகிறேன் என்பது வெறும் கண்துடைப்பு என்றார்.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை லட்சுமி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை 1000 ரூபாய் கொடுப்பேன் என்றதும் போட்டிக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரம் என்பதால் வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முதலில் இவர்கள் ஆட்சிக்கு வருவார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் ,காஸ், ஆகியவற்றின் விலை உயர்வை தடுக்க தவறியதோடு தற்போது பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்து விடலாம் என நினைக்கிறார். அது சாத்தியமல்ல. காஸ் சிலிண்டருக்கு மானியம் வங்கி கணக்கில் ஏறுவதில்லை. நிலைமை இப்படி இருக்க 6 சிலிண்டர் வழங்குவேன் என்பது பொய்யான வாக்குறுதியாகத்தான் பார்க்க முடிகிறது என்றார். லால்குடியை சேர்ந்த ஆதிநாயகி: கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு சிலிண்டருக்கு வங்கிக்கு வழங்கி வந்த மான்ய தொகை நிறுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை தொடர்ந்து கிடு கிடு என உயர்ந்தது. இதனால் கிராம மக்கள், நடுத்தர மக்கள் மிகவும் கஷ்டபட்டு வந்த நிலையில், முதல்வர் கண்டுக்கொள்ளவில்லை. இது மத்திய அரசு தான் விலை உயர்த்தியது என கூறிய அதிமுக இப்போது கிராம மக்களை ஏமாற்றி ஓட்டு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 6 சிலிண்டர் இலவசமாக தருவோம் என கூறுவது தொடர்ந்து கிராம மக்களை ஏமாற்றும் வேலை என்றார்.

மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஸ்வேதா: தற்பொழுது சிலிண்டர் உயர்வை விலையை கட்டுப்படுத்துங்கள். பிறகு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் கொடுப்பதைப் பற்றி யோசிக்கலாம். திமுகவில் ஒன்றிணைவோம் என்ற ஒரு ஆப்பில் போன் செய்தாலே வீட்டிற்கு அரிசி பருப்பு மற்றும் உணவு வகைகள் அனைத்தும் திமுக சார்பில் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதை கூட கொடுக்க முடியாத தமிழக அரசு தேர்தல் நேரத்தில் இலவசமாக வருடத்திற்கு 6 சிலிண்டர் என்பது முற்றிலும் பொய்யான வாக்குறுதி. இதனை நம்ப போவதில்லை என்றார்.

Related Stories: