ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம்: முதல்வர் அறிவிப்பு ஏமாற்று வேலை

திருவாரூர், மார்ச் 10: ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக தருவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளது ஏமாற்று வேலை என்று இல்லத்தரசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். திருச்சியில் கடந்த 7ம் தேதி நடைபெற்ற திமுக பிரமாண்ட கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை அறிவித்தவுடன் 7 உறுதி மொழிகளையும் அறிவித்தார். அந்த வகையில் ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், 30 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும், வறுமையிலிருந்து ஒரு கோடி பேர் மீட்கப்படுவர், சுகாதாரம், கல்வி போன்ற வற்றிற்கு 3 மடங்கு நிதி அதிகரிக்கப்படும் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் உரிமை தொகை போன்ற 7 உறுதி மொழிகளை அறிவித்தார். இதற்கு இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட அனைவரிடமும் பெருத்த வரவேற்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வரவேற்பினை பொறுத்துக்கொள்ள முடியாத முதல்வர் பழனிசாமி மறுநாள் நேற்று முன்தினம் குடும்ப தலைவிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பினை அறிவித்துள்ளார். ஆனால் சிலிண்டர் விலை தற்போது ஆயிரத்தை நெருங்கிவிட்ட நிலையில் இது குறித்த எந்த ஒரு எதிர்ப்பினையும் கூட தெரிவிக்காத தமிழக அரசு, தற்போது தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில்கொண்டு இலவச சிலிண்டர் என்று இல்லத்தரசிகளை ஏமாற்றுவதற்கு போலி திட்டத்தை அறிவித்துள்ளது என இல்லத்தரசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து திருவாரூர் பஜனைமட தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி விஜயா என்பவர் கூறுகையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.400க்கு வாங்கிய ஒரு சிலிண்டர், பின்னர் மோடி ஆட்சியில் அது ரூ.800 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கான மானியத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் யாருக்கும் முறையாக இந்த மானியத்தொகை சென்று சேர்வதில்லை.

இந்நிலையில் தற்போது இந்த சிலிண்டர் விலை ரூ.ஆயிரத்தை நெருங்கிவிட்டது. சாதாரணமாக கூலி வேலை செய்யும் எங்களது குடும்பத்தை போன்று பலர் எப்படி இவ்வளவு விலை கொடுத்து சிலிண்டரை வாங்க முடியும். ஆனால் விலையை குறைப்பதற்கு தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் 6 சிலிண்டர் தருவதாக பொய்யான வாக்குறுதி ஒன்றினை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச விலையை குறைப்பதற்கு கூட மத்திய அரசிடம் பேசாத பழனிச்சாமி எப்படி 6 சிலிண்டரை இலவசமாக கொடுப்பார். இது ஒரு ஏமாற்று வேலை தேர்தலுக்காக வாக்காளர்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதற்காக அறிவித்துள்ளார். இதனை நாங்கள் நம்ப மாட்டோம். எங்களை போன்ற இல்லத்தரசிகளும், பொதுமக்களும் இந்த ஏமாற்று வேலையை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் திமுக தலைவர் இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 தருவதாக அறிவித்த பின்னர் அதனை ஆயிரத்து 500 ஆக தருகிறேன் என்று பழனிச்சாமி கூறுவது எப்படி ஏற்றுக்கொள்வது. ஒருவர் ஒரு திட்டத்தை சொன்ன பின்னர் அதே திட்டத்தை வேண்டும் என்று பொய்யாக தொகையை கூட்டி தருவதாக கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது இதுவும் ஒரு மோசடி திட்டம்தான் எனவே இதனையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார்.

மன்னார்குடி மன்னார்குடி சேரன்குளத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் மனைவி ஆனந்தி:  பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு காரணமாக மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி காஸ் சிலிண்டர் விலையும் தற்போது ஆயிரத்தை நெருங்கிவிட்டது. ஆனால் விலையை குறைப்பதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு ஒரு கோரிக்கை கூட வைக்கவில்லை. குறைந்தபட்சம் தனக்கு உரிய வரியைக் கூட பொதுமக்களுக்கு குறைத்து வழங்கவில்லை. இதன் காரணமாக சாதாரண, ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபற்றி ஆளும் அதிமுக அரசு கவலைப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 சிலிண்டர் இலவசமாக தருகிறோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தற்போது 10 ஆண்டு காலமாக இந்த அதிமுக ஆட்சி இருந்து வருகிறது. அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. இந்த விலையினை குறைப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 சிலிண்டர் இலவசமாக தருவதாக தெரிவித்துள்ளார். அதுவும் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர். எனவே இது போன்ற ஒரு பொய்யான வாக்குறுதியினை குடும்ப தலைவிகளும், பொதுமக்களும் நம்ப வேண்டாம். நாங்களும் நம்ப போவதில்லை. குறைந்தபட்சம் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை குறைப்பதற்கு கூட வாய் திறக்காத இந்த அரசா, இலவச சிலிண்டர் தரப்போகிறது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்த ராதிகா இளங்கோ: என்னை போன்ற கிராமப்புற மக்கள் சாதாரண விறகு அடுப்பை பயன்படுத்தி வந்தோம். இலவசம் மானியம் என்று சொல்லி எங்களை கேஸ் சிலிண்டர் அடுப்பை வாங்க வைத்தார்கள். பின்னர் படிப்படியாக கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு மானியத்தையும் ரத்து செய்துவிட்டனர். இன்றைக்கு கேஸ் சிலிண்டருக்கு என்று குடும்பத்தில் ஒருவர் சம்பாதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். கணவன் மட்டும் சம்பாதிக்கும் என்னை போன்ற குடும்பத்திற்கு இது மிகவும் சிரமம். விலை உயர்வு குறித்து அதிமுக அரசு வாய்திறக்கவில்லை. தற்போது 6 சிலிண்டர் இலவசம் என்று கூறுகின்றனர். இத்தனை காலம் ஆட்சியில் இருந்தபோது செய்யாதவர்கள் இனி வந்தா செய்ய போகிறார்கள். இவர்கள் சொல்வது எல்லாம் ஓட்டுக்கான பொய்யான வாக்குறுதி. இதனை நாங்கள் நம்புவதாக இல்லை. எங்களை போன்ற பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றார்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் அருகே பழைய நீடாமங்கலத்தை சேர்ந்த அனந்தநாயகி: தமிழக முதல்வர் தேர்தலுக்காக அறிவிக்கப்படும் அறிவிப்புகளை என்னை போன்ற மக்கள் யாரும் நம்ம வேண்டாம். அறிவிப்புகள் அனைத்தும் ஏமாற்று வேலை. திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் அனைத்தையும் காப்பி அடித்து வெளியிடுகிறார் எடப்பாடி. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய மற்றும் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்வேன் என்றார் ஸ்டாலின். உடனே எடப்பாடி கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் தள்ளுபடி என்றார். இதேபோல் மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் சொன்னவுடன் அதனையும் எடப்பாடி தள்ளுபடி செய்தார். இதேபோல் குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமை தொகையினை கடந்த 7ம் தேதி ஸ்டாலின் அறிவித்தவுடன் மறுநாளே முதல்வர் பழனிச்சாமி நான் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு ரூ.1,500 மற்றும் வருடத்திற்கு 6 சிலின்டர் இலவசம் என்கிறார். இதிலிருந்து எடப்பாடியின் சூழ்ச்சி, தந்திரங்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். தற்போதைய சிலின்டர், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு காரணமாக இருந்த எடப்பாடியா, 6 சிலிண்டர் இலவசமாக கொடுப்பார். தற்போது நாங்கள் சிலிண்டரை கைவிட்டு பல நாட்கள் ஆகிறது. விறகு அடுப்பில்தான் பெரும்பாலான சமையல் நடக்கிறது. எனவே மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றி ஆட்சி நடத்தும் முதல்வர் பழனிசாமியை நாங்கள் ஒருபோதும் நம்ப மாட்டோம். எங்களை போன்றவர்கள் வாக்கும் அவருக்கு கிடைக்காது என்றார்.

Related Stories: