×

சேதமான நீதிமன்ற கட்டிடம் புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை

 

சாயல்குடி, ஜூன் 26: கடலாடி நீதிமன்றம் பழைய சமுதாய கூட கட்டிடத்தில் இயங்கி வருவதால், சேதமடைந்த நிலையில் உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் படையெடுத்து வருவதால் வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே புதிய நீதிமன்றக்கட்டிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடியில் கடந்த 2019ம் ஆண்டு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. தற்போது கடலாடி பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு சொந்தமான சமுதாய கூடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்த சமுதாய கூடம் கட்டி 26 ஆண்டுகள் ஆகிவிட்டதால் கட்டிடம் சேதமடைந்து மிகவும் பலவீனமாக உள்ளது. அவ்வப்போது மராமத்து செய்தாலும் கூட மேற்கூரை, பக்கச்சுவர்கள் வலுவிழந்து காணப்படுகிறது.

இதற்கிடையே வளாகத்திற்குள் ஆள்நடமாட்டம் இல்லாத நேரங்கள், விடுமுறை தினங்களில் பாம்பு போன்ற விஷஜந்துகள் உலாவி வருவதால் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய கட்டிடம் கட்ட கடலாடியிலுள்ள அரசு புறம்போக்கு காலி இடங்களை மாவட்ட முதன்மை நீதிபதி முதல் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை வந்து பார்வையிட்டு சென்றனர்.

ஆனால் உரிய இடம் தேர்வு செய்யாமல் இருப்பதால் புதிய கட்டிடம் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே விரைவில் உரிய இடத்தை தேர்வு செய்து புதிய நீதிமன்றக் கட்டிடம் கட்ட அரசு மற்றும் நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்,வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Sayalgudi ,Kadaladi court ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...