×

கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே மக்களை அச்சுறுத்தும் நீர்த்தேக்க தொட்டி

 

கமுதி, ஜூன் 26: கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பேரூராட்சி அலுவலகம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதில் காவிரி கூட்டுக் குடிநீர், ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இதன் படிக்கட்டுகள், தூண்கள், விரிசல் அடைந்தும் அதன் மேல்புற கான்கிரீட் சேதம் அடைந்து தொட்டிக்குள் இடிந்து விழுந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம் சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் இந்த தொட்டியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டாம். இதனை இடித்து விட்டு மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பேரூராட்சி நிர்வாகம் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

காகம், கழுகு உள்ளிட்ட பறவைகள் கோழி இறைச்சி உள்பட பல்வேறு கழிவுகளை தொட்டிக்குள் இட்டுச் செல்வதால் தண்ணீர் அசுத்தம் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலமுறை செயல் அலுவலர் யசோதாவிடம் வலியுறுத்தியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேரூராட்சியின் மையப் பகுதியில் உள்ள ராட்சத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அதனை அகற்றி விட்டு புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் விஐபி ஏரியாக்களுக்கு மட்டும் தினமும் குடிநீர்விநியோகிக்கப்பட்டு வருகிறது. காளநாடார் தெரு, மகமைகடை தெரு, ஆதிதிராவிடர் தெரு, காளியம்மன் கோவில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி பணியாளர்களிடம் கேட்ட போது, அவ்வாறு தான் குடிநீர் சப்ளை செய்யுமாறு அதிகாரிகளின் உத்தரவு என்று கூறுகின்றனர். பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர், அப்பகுதி கவுன்சிலர் ஆகியோரிடம் புகார் செய்தாலும் இதனை கண்டு கொள்வதில்லை என்று கூறுகின்றனர்.

மேலும் பேரூராட்சி 6வது வார்டு உறுப்பினர் போஸ்செல்வா சேதமடைந்த தொட்டி குறித்து கூறும்போது, ராட்சத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை பலமுறை செயல் அலுவலரிடம் தெரிவித்தும் அவர் தனது உயர் அதிகாரிகளிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ தெரிவிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் நலன் மீது அக்கறையின்றி அலட்சியமாக செயல்பட்டு வருகிறார். மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு சேதமடைந்த தொட்டியை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Kamudi Town Panchayat ,Kamudi ,Town ,Panchayat ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...