×

நாமக்கல்லில் 5 கோயில் உண்டியல்கள் திறப்பு: ரூ.52.46 லட்சம் காணிக்கை வசூல்

நாமக்கல், ஜூன் 26: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நரசிம்ம சுவாமி கோயில், ரங்கநாதர் சுவாமி கோயில், வீரஆஞ்சநேயர் கோயில் மற்றும் கோட்டை முனியப்பன் கோயில் ஆகிய 5 கோயில்களில் உள்ள 13 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சின்னத்துரை, ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர் இளையராஜா, அறங்காவல் குழு உறுப்பினர் செல்வசீராளன் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன. இந்த பணியில் மகளிர் சுயஉதவி குழுவினர், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மாலை வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை கத்தார், ஹாங்காங், சவுதிஅரேபியா ஆகிய நாடுகளில் இருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவர்களின் நாட்டை சேர்ந்த ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மொத்தம் ரூ.52.46 லட்சம் ரொக்கம், 64 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் 5 கோயில் உண்டியல்களும் திறக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் ரூ.10, ரூ.20 காயின்களை அதிகமாக செலுத்தியிருந்தனர். ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் நாணயங்கள் உண்டியலில் செலுத்துவது, கடந்த காலத்தை விட தற்போது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

 

Tags : Namakkal ,Namakkal Anjaneyar Temple ,Narasimha Swamy Temple ,Ranganathar Swamy Temple ,Veera Anjaneyar Temple ,Kottayam Muniyappan Temple ,
× RELATED சேந்தமங்கலம் செட்டிக்குளம் ஏரியில்...