- Saramari
- தூத்துக்குடி
- தூத்துக்குடி
- தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைப்பு நாள்
- கலெக்டர்
- அலுவலகம்
- மாவட்ட கலெக்டர்
- விசு மகாஜன்
தூத்துக்குடி, ஜூன் 26: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். கயத்தாறு அருகேயுள்ள முடுக்கலான்குளத்தை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி திடீரென எழுந்து என் நிலத்தை காணவில்லை. நிலத்துக்கான பாதையையும் காணவில்லை. எங்கள் பகுதியில் உள்ள தனியார் சோலார் நிறுவனம் விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகையால் அதிகாரிகள் தலையிட்டு எனது நிலத்தையும், விவசாய நிலத்துக்கு செல்லும் பாதையையும் மீட்டுத்தர வேண்டும் என்று பரபரப்பு புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் விஷூ மகாஜன் உத்தரவிட்டார். தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், ‘உப்பாற்று ஓடையின் கரைகளை உயர்த்தி தர வேண்டும். அத்திமரப்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2024ம் ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட 60 விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.
நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். பேய்க்குளம், பன்னம்பாறை பண்ைணயாபத்துகுளம் வரை மணிமுத்தாறு கால்வாய் தூர்வார வேண்டும். பழங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் டி.ஏ.பி உரம் தட்டுப்பாடு உள்ளது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்தில் கருமேனி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். வைகுண்டம் அணையில் இருந்து முன்னுரிமை குளமான, கடம்பா குளத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். மணிமுத்தாறு 3-வது ரீச்சில் உடையாபத்து, சீருடையார்பத்து, கடம்பன்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். காட்டுப்பன்றி தொல்லையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதற்கு பதிலளித்து கலெக்டர் விஷூ மகாஜன் பேசுகையில், தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரம் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடம்பாகுளத்துக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்டுப்பன்றிகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட உள்ளது. அதற்கான கூண்டுகளை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மின்தடை ஏற்பட்டு கூட்ட அரங்கம் இருளில் மூழ்கியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் தங்கள் கோரிக்கையை எடுத்துரைக்க முடியாமல் அமைதியாக நின்றனர். இதையடுத்து ஊழியர்கள் ஜெனரேட்டரை இயக்கி அதன்மூலம் மின் விநியோகம் வழங்கினர். சற்று நேரத்தில் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் தங்கராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
