சென்னை, ஜூன் 26: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அரங்குகளின் வாடகை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது. சென்னையில் அறிவுசார் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் முக்கியமான இடமாக கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. அந்த நூலகத்தில் 1280 இருக்கைகள் கொண்ட கலையரங்கம், 222 இருக்கைகள் கொண்ட மாநாட்டு கூடம், 136 இருக்கைகள் கொண்ட நூல் வெளியீட்டு கூடம் உள்ளிட்ட அரங்குகள் உள்ளன. அங்கு, குறைந்த வாடகை அடிப்படையில் அரங்குகள் நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்பட்டு வந்தது. அதன்மூலம் பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் புத்தக அறிமுக நிகழ்ச்சியை அங்கு ஒருங்கிணைத்து வந்தார்கள். அதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் தங்களின் நிகழ்ச்சிகளை அந்த கலையரங்கத்தில் நடத்தி வந்தனர்.
இந்த அரங்குகளுக்கான வாடகை, கடந்த சில நாள்களுக்கு முன்புவரை குறைந்த அளவிலேயே வசூலிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, 1280 இருக்கைகள் கொண்ட கலையரங்கத்திற்கான வாடகை ரூ.3 லட்சமாக இருந்தது. அதிலும் பள்ளிகள், கல்லுரிகளின் நிகழ்ச்சிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு, ரூ.1,38,000 என்ற அளவில் வசூலிக்கப்பட்டது. அதேபோல் புத்தக வெளியீட்டு அரங்குக்கு ரூ.3000 வாடையாக இருந்தது. இது நூல் அறிமுகம், கலந்துரையாடல் உள்ளிட்ட அறிவுசார் செயல்பாடுகளுக்கு உதவியாக இருந்தது; தொடர் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வந்தது. அதன்மூலம் அரசுக்கும் கணிசமான அளவில் வருமானம் வந்தது. ஆனால், சில நாள்களுக்கு அந்த அரங்குகளின் வாடகை 3 மடங்குவரை உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கலையரங்கின் வாடகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், நூல் வெளியீட்டு அரங்கின் வாடகை ரூ.14,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், மற்ற அரங்குகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அரங்குகளில் நிகழ்ச்சிகளை நடத்த யாரும் முன்பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பதிப்புத்துறை நலிவடைந்து வரும் நிலையில் குறைந்த அளவிலான வாடகை என்பது பதிப்பகத்தார் நூல் அறிமுக கூட்டங்களை நடத்த மிகப்பெரும் உதவியாக இருந்தது. ஆனால், தற்போது இந்த வாடகை உயர்வு அறிவுசார் உரையாடலை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நேரடியாகப் பாதிக்கும் என எழுத்தாளர்களும் பதிப்பகத்தினரும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகிறார்கள். எனவே, இந்த வாடகை உயர்வைத் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
