ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் அதிமுகவின் ஏமாற்று அறிவிப்பு

நாகை, மார்ச் 10: ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் தருவதாக கூறியிருப்பத அதிமுகவின் ஏமாற்று அறிவிக்கையாகும் என்று நாகை மாவட்ட பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களை கவருவதற்காக பல்வேறு கட்சியினர் புது புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக புது அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் அதிமுக வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக தருவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு எப்படி சாத்தியமாகும், இந்த அறிக்கை தேர்தலுக்கான பொய்யான அறிக்கை. ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை இலவசமாக தர முடியாது என்று பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்ட பெண்கள் கூறியிருப்பதாவது: புவனேஸ்வரி (நாகை): ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர் இலவசம். இது அதிமுகவின் தேர்தல் அறிக்கை. இது எப்படி சாத்தியமாகும். சிலிண்டர் விலை ரூ.1,000 நெருங்க போகிறது. இதனால் சாமானிய மக்கள், சிலிண்டர் பயன்படுத்த முடியாமல் நிற்கின்றனர். இலவசமாக சிலிண்டர் கொடுத்தால் இன்னும் விலை உயரும். இலவச சிலிண்டர் என்பது தேர்தல் அறிக்கையே தவிர தேர்தலுக்கு பின் நிறைவேற்றும் திட்டம் இல்லை. திமுக ஆட்சி காலத்தில் இலவச காஸ் இணைப்பு கொடுத்து சாதனை படைத்து விட்டனர். அப்படி இருக்கும்போது அதிமுக அரசின் இலவச சிலிண்டர் திட்டம் ஏமாற்றும் அறிக்கை.

மகிழரசி கார்த்திகேயன் (நாடாளும் மக்கள் கட்சி நாகை மாவட்ட செயலாளர்): முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதை எப்படி வழங்க முடியும். விலைவாசி உயர்வை குறித்து கடுகு அளவு கூட கவலைப்படாத இந்த அரசு தான் ஆண்டு ஒன்றுக்கு இலவசமாக 6 சிலிண்டர் வழங்க போகிறதா. இலவச சிலிண்டர் எவ்வாறு வழங்க போகிறோம் என்பது குறித்து தெளிவாக இல்லை. எனவே தேர்தல் நேரத்தில் பெண்களின் வாக்கை முழுமையாக பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பொய்யான அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ளார்.

கலைச்செல்வி (நாகை):  சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்று ஒரு அறிக்கை கூட விட முடியாமல் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை பற்றி கவலைப்படாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர் இலவசம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது வியப்பாக உள்ளது. இதை எப்படி செயல்படுத்த முடியும். ஏதோ தேர்தல் காலத்தில் அறிக்கை வெளியிட்டால் போதும். வெற்றி பெற்ற பின்னர் பார்த்து கொள்வோம் அல்லது நம்மை எதிர்த்து நிற்கும் கட்சிகள் குழம்பி கொண்டு இருக்கட்டும் என்ற அடிப்படையில் செயல்படுத்த முடியாத இது போன்ற அறிக்கையை முதல்வர் விடுத்துள்ளார்.

முத்துமாரி (சிவசேனா கட்சி) :  எரிபொருள்கள் விலை விஷம்போல் ஏறி வருகிறது. சிலிண்டர் விலை ஏற்றத்தால் அதை வாங்க முடியாமல் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு சென்று விட்டோம். அப்படி இருக்கும்போது சிலிண்டர் இலவச திட்டம் ஏமாற்றும் திட்டமே. இலவசம் கொடுத்து கொடுத்து விலைவாசி உயர்வு ஏற்பட்டது தான் மிச்சம். எனவே இலவசமே வேண்டாம் என்ற நிலைக்கு தமிழக மக்கள் வந்து விட்டனர். இந்த நேரத்தில் சிலிண்டர் இலவசம் என்பது மகளிரை கவரும் திட்டம். உதாரணமாக நாகை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பெண் வாக்காளர்களே அதிகம். அதுபோல தான் தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகம் இருக்கின்றனர். இதுபோன்று கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து பெண்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கோடு அறிவித்த தேர்தல் அறிக்கையே இது என்றார்.

Related Stories: