×

ஆழியார் அணையில் வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் திறப்பு

*தடையை மீறி தடுப்பணையில் குளிக்கும் அவலம்

பொள்ளாச்சி : ஆழியார் வரும் சுற்றுலா பயணிகள் பலர் கண்காணிப்பு இல்லாததால் தடையை மீறி தடுப்பணையில் குளிப்பது தொடர்ந்துள்ளது. இதனை தடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, பூங்கா ஆகியவற்றிற்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த மாதத்தில் விடுமுறை நாட்களை தவிர பிறநாட்களில் ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. தற்போது ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு உள்ளது. இந்த தண்ணீர் ஆழியாற்று அணை வழியாக பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் மற்றும் கேரள மாநில பகுதிக்கும் செல்கிறது.

ஆழியார் அணையிலிருந்து ஆரம்பிக்கும் தடுப்பணை பகுதியிலும், ஆனைமலை தடுப்பணை பகுதியிலும், தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று மறுகால் வழியாக பாய்ந்து செல்கிறது. மறுகால் பாயும்போது அருவிபோல் தண்ணீர் விழுவதால் ரம்மியமான சூல்நிலையை அனுபவிக்க வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதில் குளித்து செல்கின்றனர். இருப்பினும் இந்த தடுப்பணைகளில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளிப்பதை போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

26ம் தேதி முதல் 28ம் தேதி வரை தொடர்ந்து விடுமுறை என்பதால் ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதுடன் அதில் பலரும் தடுப்பணையில் ரம்மியமாக வழிந்தோடும் தண்ணீரில் குளிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் விபரீத சம்பவம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aliyar Dam ,Pollachi ,Aliyar ,
× RELATED ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல;...