புதுச்சேரியில் பாமக 15 இடங்களில் தனித்து போட்டி கூட்டணியில் இருந்து விலகல்

பாஜக ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு

புதுச்சேரி, மார்ச் 10:  புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகியுள்ளது. புதுச்சேரியில் 15 இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் என். ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இடையே தொகுதி பங்கீடு இறுதியானது. முன்னதாக  கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான பாமக தங்களுக்கு புதுச்சேரியில் 4 இடங்களும், காரைக்காலில் ஒரு இடமும் என 5 இடங்களை ஒதுக்க வேண்டுமென  பாமக அமைப்பாளர் தன்ராஜ், பாஜகவிடம் வலியுறுத்தி வந்தார். இதற்கிடையே தனித்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட என். ஆர் காங்கிரசுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 14  இடங்களை பாஜகவும், அதிமுகவும் பிரித்து கொள்ளும் என மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அறிவித்தார்.

 மேலும் பாமகவுக்கு இடங்கள் ஒதுக்குவது தொடர்பாக திட்டமில்லை என தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பாமக, இத்தகவலை இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கவனத்துக்கு கொண்டு சென்றது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசுமாறு அமைப்பாளர் தன்ராஜிடம் தெரிவித்தார். தொடர்ந்து நேற்று மாலை பாமக துணைத்தலைவர் சந்தியநாராயணா தலைமையில் பாமக நிர்வாகிகள் கூட்டம் குண்டு பாளையம் வன்னியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இதில் வரும் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  

இது குறித்து அமைப்பாளர் தன்ராஜிடம் கேட்டபோது: பாஜக மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்து புதுச்சேரியில் 4 இடங்களும், காரைக்காலில் ஒரு இடமும் ஒதுக்க மனு கொடுத்தோம். என். ஆர் காங்கிரசுடன் ஒப்பந்தம் போட்டு 16 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளனர். பாமக கட்சி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. எங்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் கூட்டணி பங்கீட்டை முடித்துள்ளனர். இதில் எங்களுக்கு திருப்தியில்லை. எனவே எங்கள் கட்சி நிர்வாகிகள் தனித்து போட்டியிட முடிவு செய்தனர். எங்கள் கட்சி தலைமையும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

வலுவாக இருக்க கூடிய தொகுதியில் போட்டியிடுவோம் என்றார். அதன்படி புதுச்சேரியில் 12 இடங்களிலும், காரைக்கால் 3  தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக துணைத்தலைவர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>