மாமல்லபுரம், ஜூன் 25: மாமல்லபுரம் அருகே பட்டிப்புலம் ஊராட்சியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மின் மோட்டார் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, தெருவில் உள்ள குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் பகுதி கெங்கையம்மன் கோயில் தெருவில் குடிநீர் பைப் புதைக்கப்பட்டது. பின்னர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பைப் லைன் புதைக்கப்பட்ட இடத்துக்கு மேல் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மழைநீர் கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீருக்கு அடியில் செல்லும் குடிநீர் பைப் உடைந்து, கடந்த 6 மாதங்களாக தெருவில் உள்ள குழாயில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், குடிநீரில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து, 6வது வார்டு உறுப்பினர் அருண் மாவட்ட கலெக்டர், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பட்டிப்புலம் 6வது வார்டு கெங்கையம்மன் கோயில் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது’. இதனால் குடிக்கவும் முடியாமல் குளிப்பது உள்ளிட்ட பிற தேவைகளுக்கு பயன்படுத்தவும் முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். பட்டிப்புலம் ஊராட்சி சார்பில் அடிக்கடி சேதமடைந்த பைப் லைனை சீரமைத்தாலும், மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என்றனர்.
