6 சிலிண்டர் அறிவிப்பு கண்துடைப்பு 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியின் போது ஏன் தரவில்லை குடும்பத் தலைவிகள் ஆவேசம்

தூத்துக்குடி, மார்ச் 10: ஆட்சிக்கு வந்தால் 6 சிலிண்டர் என்ற அறிவிப்பு கண் துடைப்பு, கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் போது இவர்கள் ஏன் தரவில்லை என குடும்பத் தலைவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் இரவு திடீரென அறிவித்தார். இதுகுறித்து குடும்பத் தலைவிகள் அளித்த பேட்டி வருமாறு: தூத்துக்குடி போல்டன்புரம் செல்வி : தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதான் நடந்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக இருந்து வருகிறார். அவர் பதவி வகித்த 4 ஆண்டுகளில் சிலிண்டர் விலை ரூ.300 வரை உயர்ந்துள்ளது. கடந்த  ஒரு மாதத்தில் மட்டும் ரூ.125வரை உயர்ந்தது. ஆனால் ஒரு முறை கூட சிலிண்டர் விலையை குறைக்க எடப்பாடி பழனிசாமி அரசு குரல் கொடுக்கவில்லை. தற்போது தேர்தலில் தோற்று விடுவோம் என்கிற பயத்தில் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக தரப்போவதாக கூறுவது மக்களை ஏமாற்றுவதற்கானதாகும். இவர்களது இந்த அறிவிப்பை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை’ என்றார்.

தூத்துக்குடி பக்கிள்புரம் வி.காந்திமதி: ‘இதுவரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கவலைப்படவில்லை. தற்போது தேர்தல் வருகிறது என்றவுடன் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட வேண்டுமென எண்ணி வாய்க்கு வந்த வாக்குறுதியெல்லாம் கொடுத்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உள்ள பாஜக தான் மத்திய அரசை கடந்த 6 ஆண்டாக நடத்தி வருகிறது. எத்தனை முறை சிலிண்டர் விலையை உயர்த்திய போது மவுனம் காத்த இவர்கள் தற்போது பெண்களை ஏமாற்றி வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக 6 சிலிண்டர் இலவசமாக தருவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட அவர்கள், வெற்றிக்காக எதுவேண்டுமானாலும் சொல்லுவார்கள் கடந்த தேர்தலில் அதிமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே அவர்கள் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த பிரதமர் நரேந்திரமோடி இப்படித்தான் ஆட்சியை பிடிப்பதற்காக கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார். அதுபோன்றுதான் இந்த அறிவிப்பும் உள்ளது. மக்கள் ஏமாறமாட்டார்கள்’ என்றார்.

தூத்துக்குடி பர்மாகாலனி சத்யா கூறியதாவது: ‘சிலிண்டர் விலையை குறைப்போம் என்றால் கூட மக்கள் நம்புவார்கள். தற்போது ஆண்டுக்கு 6 சிலிண்டர் என்பது தேர்தலுக்கான அறிவிப்பாகத்தான் இருக்கும். கடந்த 2 முறையும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இதுவரை எந்த பொருட்களின் விலையையும் குறைக்க வில்லை. முதல் நாள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டவுடன் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூட அதனை குறை கூறி சாத்தியம் இல்லாததை திமுக கூறுகிறது என்றார். ஆனால் அடுத்த நாளே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். தங்களுடைய கட்சி தோல்வியடையும் என்ற கருத்தால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்தியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவும் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அதிமுகவும் தாங்கள் செய்ததை சொல்லி வாக்கு கேட்க முடியாததால் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இதனை மக்கள் ஏற்றுக் கொள்வதற்குதயாராக இல்லை’ என்றார்.  

சுண்டங்கோட்டை அருகே உள்ள பிச்சிகுடியிருப்பை சேர்ந்த சோமசுந்தரி கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலையை குறைப்பதற்கு முதல்வர் பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேர்தல் அறிவிப்பாக 6 சிலிண்டர் இலவசமாக கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அவரோடு இன்று கூட்டு வைத்திருக்கிற மத்திய அரசிடம் ஒரு சிலிண்டர் ரூ.350க்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி விடலாம், மீண்டும் முதல்வராக வந்து விடலாம் என்ற கனவில் போலி வாக்குறுதியை அறிவித்துள்ளார். அவரை பதவிக்கு கொண்டு வந்தவர் வேண்டுமானால் ஏமாந்து இருக்கலாம். ஆனால்  மக்கள் இந்த பொய் வாக்குறுதியை நம்பி ஏமாற மாட்டார்கள்’ என்றார்.

குளத்தூர் பகுதியை சேர்ந்த வனஜா கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் இருந்து வருகிறது. அப்போதெல்லாம் சிலிண்டர் விலையை குறைக்கவில்லை. நாளுக்கு நாள் சிலிண்டர் விலை உயரும் போது குடும்ப பெண்கள் படும் அவலத்தை கண்டுகொள்ளாமல் தற்போது எப்படியும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற பதவி ஆசையில் பொய்யான வாக்குறுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு’ என்றார்.

Related Stories: