×

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைமேடை சுவர்களில் பாரம்பரிய ஓவியங்கள்


நெல்லை, மார்ச் 10: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தானியங்கி நடைமேடை சுவர்களில் பயணிகளை கவரும் வகையில் வரையப்பட்டுள்ள பாரம்பரிய ஓவியங்கள், பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை - நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள், மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நெல்லையை அடுத்துள்ள கங்கைகொண்டான், தாழையூத்து உள்ளிட்ட ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தானியங்கி நடைமேடை, பேட்டரி கார் என பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரயில் நிலைய தானியங்கி நடைமேடை சுவர் உள்ளிட்ட இடங்களில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கலைநயமிக்க பரதம், கரகாட்டம், கோயில் கொடை விழா சாமியாடிகளின் ஊர்வலம், மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்ைக காட்சிகள், அருவிகள், மயில், புலி உள்ளிட்டவைகளின் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள், வடமாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வரும் மக்களிடமும் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்தை எடுத்துரைக்கும் வண்ணம் உள்ளன. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழக பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் உயிரோட்டமாக உள்ளன. சிறுவர்களை கவரும் வகையிலான மயில், புலி ஓவியங்களும் பார்க்க பரவசமூட்டுகின்றன, என்றனர்.

Tags : Nellai Junction ,
× RELATED நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை...