பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொளுத்தும் கோடை வெப்பத்தால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வெப்ப அலையால் கடந்த சில நாட்களில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பிரான்ஸில் 45-ஆக அதிகரித்து உள்ளது.
பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில பள்ளிகளின் பாடவேளைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரான்சில் 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் வெப்பம் 44°C (111°F)-ஐ தாண்டியுள்ளது.
அதே போல பிரான்ஸின் புகழ்பெற்ற திராட்சை வளரும் பகுதியான போர்டோவில் வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. மத்திய பிரான்ஸ் பகுதியில் வெப்பநிலை 41.2 டிகிரி செல்சியஸை வெப்பநிலை எட்டியுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, உயிரிழந்தவர்களில் பலர் கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல், நிவாரணத்திற்காக பாதுகாப்பு இல்லாத ஆறுகள் மற்றும் ஏரிகளில் குளிக்க முற்பட்டு குதித்ததால் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். எனவே மக்கள் அதிகம் புழக்கத்தில் இல்லாத அல்லது அரசால் அங்கீகரிக்கப்படாத நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க பிரான்ஸ் அரசு கேட்டு கொண்டுள்ளது. பிரான்சில் கடுமையான வெப்பம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. முக்கிய சில சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனிடையே உலக வானிலை ஆய்வு மையம் சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், உலகளாவிய வெப்பமடைதல் விகிதத்தை விட ஐரோப்பா இருமடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
