×

மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற லாரி டிரைவரை கொல்ல முயன்ற கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை


கிருஷ்ணகிரி,  மார்ச் 10: கெலமங்கலம் அருகே, மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற லாரி டிரைவரை,  கத்தியால் குத்திய கொத்தனாருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து,  கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம்  கெலமங்கலம் அடுத்த நெருப்புக்குட்டையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (30). கொத்தனாராக உள்ள இவரது மனைவியிடம், அதே ஊரை சேர்ந்த டிப்பர் லாரி  டிரைவர் விஜயகுமார்(32) என்பவர் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதையறிந்த சக்கரவர்த்தி, கடந்த 30.5.2018ம் அன்று விஜயகுமாரை  கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து  விஜயகுமாரின் மார்பில் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து எஸ்.ஐ சிவலிங்கம் வழக்குபதிவு செய்து, கத்தியால் குத்திய சக்கரவர்த்தியை கைது செய்தார். இந்த  வழக்கு கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன், நேற்று தீர்ப்பளித்தார். அதில்,  விஜயகுமாரை கொலை செய்யும் நோக்கில், கத்தியால் குத்திய சக்கரவர்த்திக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை  மற்றும் ₹10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் அபராதத்தை கட்டத்தவறினால்,  கூடுதலாக மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என  தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயரங்கன் ஆஜராகி  வாதாடினார்.

Tags : Kothanar ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...