×

ஒதுக்கப்பட்டதோ 1080; இருப்பதோ 420 உயர் நீதிமன்றங்களில் 60% நீதிபதி பணியிடங்கள் காலி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஏப்ரலில் என்.வி.ரமணா பதவியேற்றார். அப்போது முதல், உயர் நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரையில், காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கிறார். கடந்த 5 மாதங்களில் இவர் தலைமையில் நடந்த கொலிஜியம் கூட்டத்தில், பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு 100 நீதிபதிகளை நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரே கட்டமாக 68 நீதிபதிகளை நியமிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டது, இதுவரையில் நடந்திராத சம்பவம். மேலும், இம்மாதம் 16ம் தேதி நடந்த கொலிஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 8 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்கவும், 17 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்படியும் கறாரான உத்தரவுகளை ரமணா பிறப்பித்து வருகிறார். கடந்த மாதம் 17ம் தேதி நடந்த கொலிஜியம் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இது அப்படியே ஏற்கப்பட்டு, கடந்த மாதம் 31ம் தேதி புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதி காலிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34. ஒன்பது நீதிபதிகளின் புதிய நியமனத்தின் மூலம் இந்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு பதவி மட்டுமே காலியாக உள்ளது. இதேபோன்ற பலமான நிலை, உயர் நீதிமன்றங்களிலும் ஏற்பட வேண்டும் என்ற ஆர்வம் வழக்கறிஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1080. ஆனால், கடந்த மே மாத நிலவரப்படி, இந்த நீதிமன்றங்களில் அனைத்திலும் சேர்த்து மொத்தமாக 420 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். ஆனால், இந்த நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டுகிறது. 40 சதவீத நீதிபதிகளை கொண்டு, தேங்கிக் கிடக்கும் இவ்வளவு வழக்குகளை எந்த காலத்தில் விசாரித்து, மக்களுக்கு எப்போது நீதி வழங்குவது என்ற கேள்வி வழக்கறிஞர்களிடம் நிலவி வருகிறது. இந்த நிலையில், கொலிஜியம் செய்த இந்த பரிந்துரையை ஒன்றிய அரசு இன்னும் அமல்படுத்தாமல் இருப்பதும் சமீபத்தில் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஒதுக்கப்பட்டதோ 1080; இருப்பதோ 420 உயர் நீதிமன்றங்களில் 60% நீதிபதி பணியிடங்கள் காலி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,NV ,Ramana ,Chief Justice ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு