ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்பது ஏமாற்று வேலை 2016 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றையாவது நிறைவேற்றியதா இந்த அரசு? ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட பெண்கள் பேட்டி

காஞ்சிபுரம்: சமீபத்தில் திருச்சியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதந்தோறும் 1000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாதந்தோறும் 1500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் என திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு சாத்தியமானதுதானா என்பது குறித்து மாவட்டம் முழுவதும் பெண்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவர்கள் கூறியதாவது. திலகப்பிரியா, இல்லத்தரசி, காஞ்சிபுரம்:  பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே மாதத்தில் 3 முறை விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது.

இதை கட்டுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்கவும், தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக கேட்க மாட்டார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதியாக ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக தருவதாக சொல்கிறார்கள். உள்ளூரில் ஓணான் பிடிக்காதன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிக்க போறானா என்ற கதையாக, விலை உயர்வை எதிர்க்கவே திராணியற்ற அதிமுக அரசு இலவச சிலிண்டர் கொடுப்பேன் என்று சொல்வதெல்லாம் யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை. ருக்மணி அம்மாள், கோனேரிக்குப்பம், காஞ்சிபுரம்:  காஸ் சிலிண்டர் விலை 650 ரூபாயாக இருந்து இப்போது 850 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது. இந்நிலையில் விலை உயர்வை சமாளிக்க முடியாமஸ் திணறிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், 6 சிலிண்டர் இலவசமாக தருவதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டு காலம் அமைதியாக இருந்து விட்டு தேர்தல் வந்தவுடன் சிலிண்டர் இலவசமாக கொடுப்போம் என்று சொன்னால் நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை.

சுந்தரி, அறம்பெரும்செல்வி தெரு, காஞ்சிபுரம்: சிலிண்டர் விலை றெக்கை கட்டி பறக்குது. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்படுகிறோம். எங்களின் கஷ்டத்தை, வேதனையை ஆட்சியில் இருக்கும் அதிமுகவால் உணர முடியவில்லை.விலை உயர்வின்போது எதிர்த்து கேட்கவும் முடியாமல் அடங்கி கிடந்த அதிமுக ஆட்சியாளர்கள் இப்போது தேர்தல் வந்தவுடன் இலவசமாக சிலிண்டர் கொடுப்பதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை. காமாட்சி, பழைய ரயில் நிலையம் அருகில், காஞ்சிபுரம்: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதை குதர்க்கமாக பேசிய முதலமைச்சர் இப்போது என்ன திடீர் ஞானோதயம் வந்தது, சிலிண்டர் இலவசமாக கொடுக்கிறேன் என்கிறார். ஏற்கனவே மத்தியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் தருவேன் என்று சொன்ன பிரதமர் மோடியின் வாக்குறுதி காற்றோடு போச்சு, இப்போது இலவச சிலிண்டர் கொடுக்கிறேன் என்று சொல்லும் முதலமைச்சர் எடப்பாடியின் வாக்குறுதியும் அப்படித்தான் ஆகும்.

இதை நாங்கள் நம்பத் தயாராக இல்லை பா.ஜெயலட்சுமி & இள்ளலூர் சாலை, குடும்பத்தலைவி, திருப்போரூர்: ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை இலவசமாக கொடுப்பதாக முதல்வர் எடப்பாடி கூறியிருப்பது நம்பத்தகுந்ததாக இல்லை. முதலில் இப்படித்தான் சொல்வார்கள். பின்னர் திமுக ஆட்சியில் இலவச காஸ் திட்டத்தின் கீழ்பெற்றவர்களுக்கு இந்த திட்டம் கிடையாது என்று சொல்வார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச காஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சிலிண்டர்கள்தான் உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி வரை முறையாக வழங்கப்பட்ட காஸ் சிலிண்டர் மான்ய தொகையை, மத்திய பாஜக அரசு சிறிது சிறிதாக குறைத்து, தற்போது முழுமையாக நிறுத்தி விட்டது. இதை கேட்க முதல்வருக்கு நேரமும் இல்லை. எண்ணமும் இல்லை. இந்த மானிய தொகையை ஒழுங்காக கொடுத்தாலே போதும். எங்களுக்கு இலவச சிலிண்டரே தேவைப்படாது.

கோ.ரம்யா & இள்ளலூர் சாலை, குடும்பத்தலைவி, திருப்போரூர்: கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் கலைஞர் ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. இதனால் திமுகவின் அறிவிப்பில் ஒரு நம்பகத்தன்மை இருந்தது. 2016ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்கப்படும். பொது இடங்களில் வைபை வசதி  வழங்கப்படும். 1 லிட்டர் பால் ₹25க்கு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகையின்போது கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 500 கூப்பன் வழங்கப்படும். பெண்களுக்கு அம்மா வங்கி அட்டை வழங்கப்படும் என கூறியிருந்தனர். இதில் ஒன்றையாவது அவர்கள் நிறைவேற்றினார்களா. தேடிப்பார்த்தாலும் கிடைக்க வில்லை. இதனால் இவர்களின் வாக்குறுதி காற்றில்தான் விடப்படும். நம்பிக்கையே வரவில்லை.

ஆர்.நிஷா, இல்லத்தரசி. லட்டூர் கிராமம், திருக்கழுக்குன்றம்:  வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காகவே அதிமுக இலவச சிலிண்டர் என்ற பொய்யான வாக்குறுதியை கொடுத்துள்ளது. தற்போது, வரலாறு காண முடியாத அளவு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதை குறைக்க வக்கில்லை. அதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவங்க இலவச சிலிண்டர் கதையெல்லாம் சொல்வது முற்றிலும் ஏமாற்று வேலை. இது எப்படி இருக்கிறதென்றால் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லிவிட்டு ஏமாற்றி வரும் கதை போன்றதுதான். என்பதை நாம் தான் புரிந்துக் கொள்ள வேண்டும். செ.மாரியம்மாள். செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம்: மோடியும் - எடப்பாடியும் கண்கட்டி வித்தைக்காரர்கள். மோடி 15 லட்சம் தருவதாக கூறியவிட்டு, எங்கள் கண்களை கட்டி விட்டார். தற்போது வரை அந்த 15 லட்சத்தை பார்க்கவே முடியவில்லை.

10 ஆண்டு ஆட்சியில் சிலிண்டர் விலை ஏகபோகமாக உயர்ந்து வருகிறது. அப்போதெல்லாம் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில ஆட்சியாளர்கள், தற்போது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு கண்கட்டி வித்தைகளை காட்டி வருகின்றனர். தற்போது சிலிண்டர் விலை அதிகரிப்பின் காரணமாக நாங்கள் பழையபடி விறகு அடுப்புக்கே சென்று விட்டோம். 6 சிலிண்டர்கள் இலவசம் என்கிறார்கள். அப்படி என்றால் வரும் காலங்களில் சிலிண்டர் விலை மேலும் உயர வாய்ப்புகள் அதிகம். எனவே, எங்களுக்கு சிலிண்டரும் வேண்டாம் உங்கள் ஆட்சியும் வேண்டாம். கலையரசி, கொளம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் தங்கள் அதிமுகவை முற்றிலும் புறக்கணிப்பார்கள் என்பதை உணர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது முற்றிலும் மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்பு. இது, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் வழங்குவேன் என மோடி அறிவித்து ஓட்டுக்களை பெற்ற அதே போன்றதொரு இதுவும் ஏமாற்று அறிவிப்பு. காஞ்சனா, மகளிர் சுயஉதவிக்குழு தலைவி, காத்தான் தெரு. செங்கல்பட்டு: அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் கொடுப்பதாக எடப்பாடி பொய் வாக்குறுதி கொடுத்துள்ளார்  இதை தமிழக பெண்கள் ஒருபோதும் நம்பி, இனியும் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, நாங்கள் ஜெயித்தால் 15 லட்சம் செலுத்துவதாக  வாக்குறுதியை கொடுத்து ஜெயித்து விட்டு, இதுவரை 15 பைசாகூட வங்கி கணக்கில்   போடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இதை பெண்கள் ஆகிய நாங்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். அதேபோல் அதிமுக அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, சோதனையான கொரோனா காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிபோட்டதில்லை. அப்போது ஒன்றும் செய்யாத எடப்பாடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 சிலிண்டர் கொடுப்பதாக கூறுவது, பெண்கள் வாக்குகளை பெறவதற்கான நாடகம். ஏற்கனவே 15 லட்சம் போடுவதாக சொன்ன மோடியையும், தற்போது சிலிண்டர் தருவதாக கூறும் எடப்பாடியையும் நாங்கள் நம்பமாட்டோம். இந்த தேர்தலில் பொய் வாக்குறுதிகள் கொடுத்துள்ள அதிமுக அரசுக்கு பெண்களாகிய நாங்கள் சாவு மணி அடிப்போம். ஐ.சுமிதா. குடும்ப தலைவி, கொக்கிலமேடு, மாமல்லபுரம்: பாஜ ஆட்சி அமைந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 15 லட்சம் வங்கி கணக்கில் போடப்படும் என ேமாடி தெரிவித்தார். அந்த 15 லட்சமே இன்னும் வந்து சேரவில்லை. அதுபோல், எடப்பாடி ஆட்சிக்கு வந்த பிறகு 6 சிலிண்டர் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு 1,500 வழங்கப்படும் என சொல்வது முற்றிலும் பொய்யான வாக்குறுதி.

Related Stories: