×

அமெரிக்கா-ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ‘நீண்ட கால’ ஒப்பந்தமாக மாறும் – பாக்., பிரதமர் நம்பிக்கை

இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு “நீண்ட கால ஒப்பந்தமாக” மாறும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பிற சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் அமெரிக்கா – ஈரான் நாடுகள் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்கா – ஈரான் இடையேயான போர்நிறுத்தம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளதை வரவேற்றார். அடுத்த 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடிவடைந்து, இந்த தற்காலிக ஒப்பந்தம் நிரந்தர ஒப்பந்தமாக மாறும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். மேலும் இந்த ராஜதந்திரச் செயல்பாட்டில் பாகிஸ்தானின் பங்கை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகக் குறிப்பிட்டார்.

அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த ஒப்பந்தம் மோதலை தணித்து அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக கூறினார். அடுத்த 2 மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும், அதில் ஈரானின் அணுசக்தி வளங்கள், ஏவுகணைகள் மற்றும் முடக்கப்பட்ட சொத்துகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் ஷெரீப் தெரிவித்தார்.இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்குப் பாகிஸ்தான் முழுமையான நேர்மையுடன் தனது சிறந்த முயற்சியை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு, வலுவான இருதரப்பு உறவுகள் மற்றும் பரந்த பிராந்திய வளம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags : US ,Iran ,Pak ,PM ,ISLAMABAD ,PAKISTAN ,SHABBAS SHERIFF ,UNITED ,STATES ,West Asia ,
× RELATED மேற்காசிய நெருக்கடி சில பாடங்களை...