×

பரவும் ஷிகெல்லா… அலெர்ட் ப்ளீஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் கன்னூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி செல்லும் சிறார் சிறுமியரிடையே “ஷிகெல்லா” எனும் பாக்டீரியா தொற்று நோய் பரவி வருவதும், அதன் விளைவாக நான்கு வயது குழந்தை இறந்திருப்பதும் வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது. ஷிகெல்லா என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்று. இந்தத் தொற்றுக்கு உள்ளாகும் நபருக்கு அவரது குடல் பகுதியில் கடுமையான அழற்சியை உருவாக்கி, காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, குமட்டல் வாந்தி இதனுடன் சீதபேதி ஏற்படும்.

சீதபேதி என்பது குடலின் சுவர்பகுதியில் இருக்கும் திசுக்களில் கடுமையான அழற்சி நிலை ஏற்படுவதால் உருவாகிறது. இதன் பொருட்டு, மலத்துடன் இரத்தமும் சளிச் சவ்வும் சேர்ந்து வெளியேறும் நிலை உருவாகும். இந்தத் தொற்றுக்கு உள்ளான நபரின் மலத்தில் ஷிகெல்லா பாக்டீரியா வெளியேறுகிறது.

அந்த நபர் முறையாக கை சுத்தம் பேணாமல் இருந்தாலோ, தன் சுத்தம் பேணாமல், உணவுப் பொருட்களை சமைப்பது/ பரிமாறுவது போன்ற விஷயங்களில் ஈடுபடும்போதும், தொற்றுக்குள்ளானவர்களிடம் இருந்து தொற்று பரவுகிறது. இதை மலத்தில் இருந்து வாய்க்குப் பரவும் வழி என்கிறோம். (Faeco ORAL Route) சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள், மனிதக் கழிவுகளுடன் மாசுபட்ட நீர் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உண்பதால் தொற்றுப் பரவல் நடக்கிறது.

ஷிகெல்லா தொற்றைப் பொருத்தவரை வெறும் 10 முதல் 100 பாக்டீரியா இருந்தாலே தொற்று நிலையை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதாக இருக்கிறது. ஏனைய பாக்டீரியாக்களுக்கு இந்தத் தொற்று ஏற்படுத்தும் அளவு என்பது லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் தேவை என்ற நிலை இருக்கும். கூடவே, ஷிகெல்லா பாக்டீரியா – இரைப்பையின் வலிமையான அமிலச்சுரப்பை தாக்குப்பிடித்து உயிருடன் குடலுக்குச் செல்லும் வல்லமையும் பெற்றிருக்கிறது இரைப்பை தாண்டி குடலுக்குச் சென்று குடலின் செல்கள் மற்றும் திசுக்களை ஊடுருவி கடுமையான அழற்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதால் இந்த பாக்டீரியாவிடம் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எச்சரிக்கை அறிகுறி

நன்றாக இருந்த ஒருவருக்குத் திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, கடுமையாக வயிறை இறுகப் பிடிப்பது போன்ற வலியுடன் ரத்தமும் சளிச்சவ்வும் கலந்து அடிக்கடி சிறு சிறு அளவில் பேதி ஆகினால் வந்திருப்பது ஷிகெல்லாவாக இருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டும்.

சிகிச்சை

சுய மருத்துவத்தில் காலந்தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஓ.ஆர்.எஸ் எனும் சர்க்கரை உப்புக் கரைசல் திரவத்தைப் பருகி நீரிழப்பையும் தாது உப்புகள் இழப்பையும் சரிசெய்து வர வேண்டும். தேவைப்பட்டால், ரத்த நாளம் வழி திரவங்கள் ஏற்றுவது குறித்து மருத்துவர் முடிவெடுப்பார். தீவிரமான வயிற்றுப்போக்கு இருப்பின் ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரை செய்யப்படும்.

விரைவாக நோயைக் கண்டறிந்து விரைவாக செயல்பட்டு முறையான மருத்துவ சிகிச்சை பெற்றால் பாதிப்புகளையும் மரணங்களையும் தவிர்க்கலாம். காலந்தாழ்த்தினால், வலிப்பு நோய், தீவிர குடல் அழற்சி, தொற்று ரத்தத்தில் கலக்கும் நிலை, தொற்றினால் ஏற்படும் மூட்டு அழற்சி ஆகியவை பின் தொடர்ச்சி நோய்களாகத் தொடரும் வாய்ப்பு உள்ளது.

அதிக கவனத்துக்கு உரியவர்கள்

*சிறு குழந்தைகள்

*முதியோர்கள்

*எதிர்ப்பு சக்தி குன்றியோர்

*நீரிழிவு நோயர்கள்

தவிர்க்க செய்ய வேண்டியவை

*கை சுத்தம் பேணல் அவசியம்

*உணவை உண்ணும் முன்பும், தயாரிக்கும் முன்பும், பரிமாறும் முன்பும் கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும்.

*கழிப்பறை உபயோகித்த பின்பு கட்டாயம் சோப் போட்டுக் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

*உணவு தயாரிப்புத் துறையில் இருப்பவர்கள் – தங்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் போது கட்டாயம் உணவை தயாரிக்கவோ/ பரிமாறவோ விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
*உணவை பரிமாறும் போது கையுறை அணிந்து பரிமாறுவது நல்லது.

*சுகாதாரமற்ற முறையில் செய்யப்படும்/ விற்கப்படும் உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

*சுத்தமான நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும்.

*குடிநீர் குழாய் மற்றும் கீழ்நிலை குடிநீர் தொட்டிகளில் சாக்கடை நீர் மற்றும் மனிதக் கழிவு ஆகியவை கலக்காமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*மேல் நிலை குடிநீர் தொட்டிகளை முறையாக சரியான இடைவெளியில் தேய்த்துச் சுத்தம் செய்து குளோரினேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஷிகெல்லா என்பது மிகவும் வேகமாகப் பிறருக்குப் பரவும் தொற்றாக இருப்பதால் இது குறித்து கவனத்துடன் இருந்து இதனால் துன்பங்கள் ஏற்படாவண்ணம் நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காத்துக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு:-பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா

 

Tags : Wayanad ,Kozhikode ,Malappuram ,Kannur ,Kerala ,
× RELATED ஆரோக்கியம் தரும் தோப்புக்கரணம்!