சிவகங்கை, ஜூன் 23: சிவகங்கை ஏடிஎம்மில் பணம் வராத நிலையில் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம பணத்தை மீட்டுத்தரக்கோரி தனியார் நிறுவன காவலாளி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். சிவகங்கை அருகே நைனான்குளத்தை சேர்ந்தவர் கருப்பையா. தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் கருப்பையா, கடந்த பிப்ரவரி 2ம் தேதி சிவகங்கை காந்திவீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.10,000 பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராத நிலையில், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.10,000 பிடித்தம் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது.
இதையடுத்து வங்கியில் புகார் அளித்த அவர், பலமுறை வங்கி அலுவலர்களை சந்தித்து இது குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் இது வரை உரிய தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் தனது பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: மாதம் ரூ.10,000 சம்பளம் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறேன். பணம் வராத நிலையில் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த ரூ.10,000ஐ திரும்ப பெற கடந்த 5 மாதங்களாக அலைந்து வருகிறேன். குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறேன். தனது வாழ்வாதாரத்திற்கு தேவையான அந்த தொகையை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகமும் வங்கி அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
