×

வேதாரண்யம் கோடியக்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு

வேதாரண்யம், மார்ச் 9: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் இதுவரை 57 ஆலிவர் ரெட்லி ஆமைகள் கோடியக்கரை கடற்கரைக்கு வந்து 6,241 முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளது. நரி, நாய் மற்றும் மனிதரிடம் இருந்து பாதுகாக்க ஆமை முட்டைகளை சேகரிக்க வனத்துறை ஊழியர்களை கொண்டு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் முட்டைகளை சேகரித்து கோடியக்கரை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக ஒவ்வொரு ஆமை முட்டைகளையும் தனித்தனியாக குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டுள்ளது. 41 முதல் 55 நாட்களுக்குள் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றை பத்திரமாக எடுத்து மீண்டும் கடலில் விடுவது வழக்கம்.

இதேபோல் 1972ம் ஆண்டு முதல் 48 ஆண்டுகளாக ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு சுமார் 10 லட்சம் குஞ்சுகள் கோடியக்கரை கடற்கரையில் இருந்து விடப்பட்டுள்ளன. இந்த ஆமை குஞ்சுகள் 25 ஆண்டுகள் கழித்து பருவமடைந்து இதே கடற்கரைக்கு மீண்டும் முட்டையிட வருகின்றன என்று ஆய்வில் தெரியவருகிறது. இந்நிலையில் நேற்று வைகை டேம் வனத்துறை பயிற்சி முகாமில் இருந்து பயிற்சிக்காக வந்திருந்த வன அலுவலர்களுக்கு ஆமை முட்டைகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து நேரடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று முட்டையிட்ட ஒரு ஆமையிடம் இருந்து 47 முட்டைகள் எடுக்கப்பட்டு முட்டை பொரிப்பகத்தில் பத்திரமாக புதைக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே நாகை மாவட்டத்தில் தான் அதிகளவில் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் எடுத்து பொரிப்பகத்தில் வைக்கப்பட்டு பொரிக்கப்பட்ட குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாக கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

Tags : Oliver ,Redley ,Vedaranyam Millionaire ,
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...