திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் வடக்கு ரத வீதியில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல்குமார், நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த பெண்கள், திடீரென அமைச்சரை முற்றுகையிட்டு, ‘‘எங்கள் பகுதியில் குடிநீர் சரிவர வருவதில்லை. முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். அதற்கு அமைச்சர், ‘பார்ப்போம்’ என்று கூறி கிளம்பிச் சென்றார். அப்போது உடனிருந்த மாவட்ட செயலாளர், பெண்களை சமாதானம் செய்தார்.
மேலும் அங்கிருந்த தவெக தொண்டர் ஒருவர், ‘சத்தம் போடாமல் மெதுவாக கேளுங்கள்’ என பெண்களிடம் கூறினார். அதற்கு பெண்கள், ‘‘குறைகளை கூற வந்த எங்களை அமைச்சர் கண்டுகொள்ளவேயில்லை. குடிநீர் சரியாக வராததால் விலை கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம். சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இறந்தவர்களை கூட தூக்கி செல்ல கடும் சிரமமாக உள்ளது. எங்கள் பிரச்னைகளை எங்கு சென்று யாரிடம் சொல்வது என தெரியவில்லை. அமைச்சரிடம் கூறினால் ‘பார்ப்போம்’ என கூறிவிட்டு செல்கிறார்’’ என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
