×

நாளை நீட் மறு தேர்வை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் வார நாட்கள் கால அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கம்: சிறப்பு உதவி மையங்களும் அமைப்பு

சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை; நாளை நடைபெறவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை (நீட்) எழுத செல்லும் மாணவர்கள் எளிதாக பயணம் செய்வதற்காக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், வழக்கமான வாரநாட்களில் இயக்கப்படுவது போன்ற அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும். மேலும், முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் பொறியியல் மேம்பாட்டு பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல்/கடற்கரை, அரக்கோணம்- திருத்தணி வழித்தடத்தில் மட்டும் புறநகர் ரயில்கள் தற்போதுள்ள அட்டவணையின்படி இயக்கப்படும். அதேபோல, சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும். தவிர மற்ற அனைத்து சென்னை புறநகர் வழித்தடங்களிலும் வார நாட்களுக்கான கால அட்டவணை பின்பற்றப்படும்.

தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூர் மற்றும் காட்பாடி ஆகிய 9 முக்கிய ரயில் நிலையங்களில் பிரத்யேக நீட் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த உதவி மையங்கள் மூலம் ரயில்களின் விவரங்கள், உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கான வழிகள் குறித்த தகவல்கள் பயணிகளுக்கு வழங்கப்படும்.

சென்னையிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்லும் தேர்வர்கள் எவ்வித பதற்றமும் சிரமமுமின்றி, தடையற்ற முறையில் சரியான நேரத்திற்கு சென்றடைவதை உறுதி செய்யவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, நீட் தேர்வர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த ரயில் சேவை மாற்றங்களை கவனித்தில் கொண்டு தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக்கொள்கிறது.

Tags : Chennai Fort ,NEET ,Chennai ,Chennai Railway Board of the Southern Railway ,
× RELATED தமிழகத்தில் உள்ள 46 கோயில்களின் உபரி...