×

தங்கள் கிராமத்திலேயே வாக்குசாவடி அமைக்க கேட்டு கொ.தளவாய்புரம் மக்கள் போராட்டம்

ஓட்டப்பிடாரம், மார்ச் 9: அதிக வாக்காளர்கள் கொண்ட தங்கள் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி கொ.தளவாய்புரம் கிராம மக்கள்  ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டப்பிடாரம் தாலுகா எஸ்.கைலாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கொ.தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு அவர்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியிலேயே வாக்குச்சாவடி மையம் அமைக்க வலியுறுத்தி திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   பின்னர் தாசில்தார் மணிகண்டனை சந்தித்து வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: தங்களின் கிராமமான கொ.தளவாய்புரத்தில் சுமார் 725 வாக்காளர்கள் உள்ளனர். ஏற்கனவே எங்கள் கிராமத்தில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டதால் 2016-ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கொம்பாடி கிராமத்தில் உள்ள ஆர்.சி.துவக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு  இடம் மாற்றப்பட்டது.

பராளுமன்ற தேர்தல், ஓட்டப்பிடாரம் சட்டசபைக்கான இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றின் போதும் வாக்குச்சாவடி மீண்டும் எங்கள் கிராமமான கொ.தளவாய்புரத்துக்கு மாற்றப்படவில்லை. இதனால் இந்த தேர்தல்களில் எங்கள் ஊரைச்சேர்ந்த முதியோர், பெண்கள் என அனைவரும் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று வாக்களித்தோம். நாங்கள் அப்போது கடும் சிரமங்களை சந்தித்தோம். எனவே, வரும் ஏப்ரல் 6-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டசபைக்கான தேர்தலில் எங்களின் கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் எங்கள் ஊர் பள்ளி. வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் விதமாக வாக்குச்சாவடியை முன்பு போன்று மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டது. எனவே வாக்குச்சாவடியை மாற்ற இயலாது. தேர்தல் முடிந்தவுடன் உங்களது கோரிக்கை குறித்து பரிசீலித்து, கொ.தளவாய்புரம் பள்ளிக்கு இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Talawaipuram ,
× RELATED தளவாய்புரத்தில் பங்குனி பொங்கல் விழா