சென்னை: ஈரோடு மாவட்டம் பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி தமிழக மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான அறிக்கையில் அவர், பவானியில் 74 வயது மூதாட்டி தாக்கப்பட்டு 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
தவெக அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது. பிரச்சாரத்தின் போது “தூய சக்தி” என்று முழங்கிவிட்டு, ஆட்சி அமைத்ததும் மௌனவிரதமிருந்து மகளிர் பாதுகாப்பைப் பறிப்பது தான் “மாற்றமா” முதல்வர் அவர்களே? “மனம் குமுறுகிறது, கண் கலங்குகிறது” என இனியும் வசனம் பேசாமல், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாக செயல்படுங்கள் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
