கோலங்கள் வரைந்தும், பரமபதம் விளையாடியும் அசத்தல் தேர்தல் விழிப்புணர்வில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு

நாகர்கோவில், மார்ச் 9: தேர்தல் விழிப்புணர்வில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திரளாக கலந்துகொண்டு கோலங்கள் வரைந்தும், பரம பதம் விளையாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் ஒவ்வொரு துறைகளின் அதிகாரிகளும் இதனை மேற்கொண்டனர். நேற்று உலக மகளிர் தினம் என்பதால் மகளிர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மகளிர் திட்டத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக மகளிர் திட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.   கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை கூடுதல் இயக்குநர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா தொடக்கிவைத்தார். மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி டதி பள்ளி சந்திப்பு வழியாக வேப்பமூடு சந்திப்பில் நிறைவுபெற்றது.

பேரணியில் பங்கேற்ற பெண்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய பதாகைகளை ஏந்தி சென்றனர். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டது.  பரம பதம் விளையாடியும் பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாக்களிப்பதை ஒரு விரல் புரட்சி என்பதை வலியுறுத்தியும் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் வரைந்து அதன் அருகே பெண்கள் வரிசையில் நின்று வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பைகள், தட்டு, கைப்பை போன்றவற்றிலும், கீ செயின், தரை விரிப்பு போன்றவற்றிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், 100 சதவீத வாக்குபதிவு, ஹெல்ப்லைன் எண் 1950 ஆகியவற்றை பதிவு செய்து தயாரித்து வைத்திருந்தனர். இந்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் பார்வையிட்டனர். சுய உதவிக் குழுப் பெண்களும் நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>