×

பூதப்பாண்டி தாலுகா அலுவலகத்தில் சிறை காவலரை தாக்கிய விஏஓ - 8 உதவி அலுவலர்கள் மீது வழக்கு

பூதப்பாண்டி, மார்ச் 9: குமரி மாவட்டம் கொட்டாரம் மேற்கு கிராமம் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சங்கீதா (38). இவரது கணவர் செந்தில்குமார் (41). இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில், சிறை காவலராக உள்ளார். கடந்த 6ம்தேதி  பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் இருந்து, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேடு கருவிகள் உள்ளிட்டவற்றை பிரித்து அனுப்பும் பணி நடந்தது. காலையில் தொடங்கிய பணி நள்ளிரவு வரை நீடித்தது. 300 விஏஓக்கள், 300 உதவியாளர்கள் என 600 பேர் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். சங்கீதாவும் இந்த பணிக்கு வந்திருந்தார். நள்ளிரவு வரை பணி நீடித்ததால், தனது மனைவியை அழைத்து செல்வதற்காக செந்தில்குமார் வந்திருந்தார். நள்ளிரவில் அவர் பூதப்பாண்டி தாலுகா அலுவலக காம்பவுண்ட் அருகே காரில் நின்று கொண்டிருந்த போது, கிள்ளியூர் தாலுகா சூழால் கிராம நிர்வாக அதிகாரியான பிரசாத் என்பவருக்கும், செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் செந்தில்குமார், பிரசாத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்ததும் மற்ற வி.ஏ.ஓ.க்கள், அலுவலக உதவியாளர்கள் எந்திரங்களை அனுப்பும் பணியை நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பூதப்பாண்டி போலீசார் செந்தில்குமார் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 353 (அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல்), 323 (காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த பின், போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே வி.ஏ.ஓ.க்கள் சிலர் தன்னை தாக்கியதில் காயம் உள்ளதாக செந்தில்குமார் கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சங்கீதா பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அலுவலக பணிக்காக பூதப்பாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்த தன்னை அழைத்து செல்ல வந்த கணவர் செந்தில்குமாரை வி.ஏ.ஓ பிரசாத் மற்றும் அவருடன் சிலர் தாக்கினர். இதை பார்த்து தடுக்க சென்ற தன்னையும் தாக்கி ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர் என கூறி இருந்தார்.  இந்த புகாரின் பேரில் வி.ஏ.ஓ. பிரசாத், கிராம நிர்வாக உதவியாளர்கள் ராஜராஜன், மாதவன், பால்தம்பி, ரெஜீஷ், வீரபாகு, மணிகண்டன், அலெக்சாண்டர், அப்துல் ரகுமான் ஆகிய 9 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 (பி), 147, 148, 323, 506 (ii) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : VAO-8 ,Poothapandi taluka ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு