×

நாகர்கோவிலில் பொதுமக்கள் மத்தியில் பேசாமல் சென்ற அமித்ஷா கட்சி நிர்வாகிகள் அதிருப்தி

நாகர்கோவில், மார்ச் 9: நாகர்கோவிலில் பொதுவெளியில் மக்கள் மத்தியில் அமித்ஷா பேசாமல் சென்றது, கட்சி நிர்வாகிகளை வருத்தம் அடைய செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றுமுன் தினம் குமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கி வைத்தார். சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், அங்குள்ள வீடுகளுக்கு சென்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கி நோட்டீஸ் வினியோகம் செய்தார். அப்போது அதிமுக, பா.ஜ. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து நாகர்கோவில் வந்த அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த, அமித்ஷா வாகனத்தில் ஏறி உரையாற்றுவார் என அறிவித்திருந்தனர். ஆனால் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தவுடன்  திறந்த வாகனத்தில் ஏறாமல் வேறு ஒரு காரில் ஏறி அமித்ஷா அங்கிருந்து சென்று விட்டார். அவர் எப்படி சென்றார் என்பது கூட தொண்டர்களுக்கு தெரியவில்லை. சில நிமிடங்கள் பின்னர்தான் அவர் பிரசாரத்தையே முடித்து விட்டு ஓட்டலுக்கு சென்றது தெரிந்தது. இதனால் அவரது பேச்சை கேட்க திரண்டிருந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏமாற்றம் அடைந்தனர். சுசீந்திரத்திலும் பொதுமக்கள் மத்தியில், அமித்ஷா எதுவும் பேச வில்லை.

பொது வெளியில் ஒரு இடத்தில் கூட தொண்டர்கள் மத்தியில் பேசாமல் சென்றது, பா.ஜ.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் மத்தியில் பேச வேண்டிய அரசியல் பேச்சை, நாகர்கோவிலில் ஓட்டலில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினார். பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், காங்கிரசையும் விமர்சித்தார். ஆனால் இந்த பேச்சை கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.வினர் ரசிக்க வில்லை. பூத் கமிட்டி நிர்வாகிகள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். தேர்தல் பணி தொடர்பாக அமித்ஷா ஆலோசனை வழங்குவார். ஒரு சில நிர்வாகிகளை பேச வைத்து, கட்சி பணி குறித்து கேட்டறிவார் என்றெல்லாம் எதிர்பார்த்தனர். அமித்ஷாவின் அறிவுரைகளை குறிப்பெடுக்க பலர் நோட் பேடு, பேனாவுடன் தயாராக இருந்தனர். ஆனால் அவர் அதுபற்றி பேசாமல், பொதுக்கூட்டத்தில் பேச வேண்டியதை பேசி விட்டு சென்று விட்டார். இதுவும் கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை உண்டாக்கியது.

பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக, ெபாது வெளியில் அமித்ஷா உரையாற்ற வில்லை என கூறப்படுகிறது. சுசீந்திரத்திலும் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டி மக்கள், அமித்ஷா நெருங்கினர். அவரது வருகைக்கு 20 நிமிடத்துக்கு முன் தொண்டர்கள் தடுப்புகளை தாண்டியதால், போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு பொதுமக்களை கயிறு கட்டி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கோயில் வரை அவரது கார் வரும் வகையில் தான் ஒத்திகை நடத்தப்பட்டு இருந்தது. ஆனால் கோயிலுக்கு முன், மக்கள் கூடியதால் கோயில் தெப்பக்குளம் அருகிலேயே காரில் இருந்து இறங்கி அவர் நடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதே போல் வேப்பமூடு சந்திப்பிலும் தொண்டர்கள் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே போலீசாரின் கடும் கட்டுப்பாடுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அமித்ஷா வேப்பமூடு சந்திப்பு பகுதியை நெருங்கி வந்ததும் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைவரையும் காமராஜர் சிலை அருகே ஒன்று திரள செய்கை காண்பித்தார். உடனே கட்சி மாநில தலைவர் முருகனும் கயிறுகள், தடுப்புகளை கடந்து வர அழைப்பு விடுத்தார். இதையடுத்து தொண்டர்கள் அனைவரும் காமராஜர் சிலையை சுற்றி திரண்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியை சுற்றி உயரமான கட்டிடங்கள் இருந்தன. மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதனால் காமராஜர் சிலையில் மாலை அணிவித்தவுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பேசாமல், அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

Tags : Amit Shah ,Nagercoil ,
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...