×

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறித்து தவெக எம்எல்ஏ சர்ச்சை கருத்து – விவசாயிகள் கொந்தளிப்பு

கம்பம்: முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவதை அனுமதிக்க முடியாது என தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழகம் போராடி வரும் சூழலில், தவெக எம்எல்ஏ-வின் கருத்தால் விவசாயிகள் கொந்தளித்து உள்ளனர்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 133 அடியாக நிலைநிறுத்தி உபரிநீரை தமிழகப் பகுதி கண்மாய், அணைகளில் தேக்க வேண்டும் என்று கம்பம் தொகுதி தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். 152 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழகம் போராடி வரும் நிலையில், விவசாயிகளுக்கு ஜெகநாத் மிஸ்ராவின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய அவர் மேற்கண்ட கருத்தை கூறியதோடு, முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும்போது, உபரி நீர் இடுக்கி அணைக்குச் சென்று அங்கிருந்து அரபிக்கடலில் வீணாகக் கலக்கிறது. எனவே அந்த உபரிநீரைத் தமிழகப் பகுதிக்கு முழுமையாகத் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த வேண்டும் என்று தென் தமிழகத்தைச் சேர்ந்த 5 மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் பல ஆண்டுகளாகச் சட்டப் போராட்டங்களையும், களப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரே அணையின் நீர்மட்டத்தை 133 அடியாகக் குறைக்க பரிந்துரைப்பது தங்களின் நீண்ட காலப் போராட்ட நீராதார உரிமையைப் பாதிக்கும் என்று கூறி விவசாயிகள் தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Tags : Tameka ,Mullai Periyaru Dam ,Jeganath Mishra ,Mulla Periyaru Dam ,Tamil ,Nadu ,
× RELATED இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இரண்டு...