திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை , மார்ச் 8: புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறை புதுக்கோட்டை தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. மாரியம்மனுக்கு எல்லாம் முதன்மை மாரியாக விளங்கி வருவது திருவப்பூர் முத்துமாரியம்மன். இந்த முத்துமாரியம்மன் கோயிலின் மாசி மகத் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, இதனையடுத்து தினமும் மாரியம்மனின் வீதிஉலா நடைபெற்று வருகின்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.

இதனையடுத்து புதுக்கோட்டை நகரப் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் அலகுகுத்தி தீச்சட்டி ஏந்தி, பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்திவருகின்றனர். பக்தர்கள் எடுத்து சென்ற பால் குடத்தில் உள்ள பாலில் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் ஊர்வலம் செல்லும் வழிநெடுகிலும் தண்ணீர்பந்தல் அன்னதானம் உள்ளிட்டவைகளும் நடைபெற்றது. மேலும் இன்று முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் திருவிழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>