×

கீரனூர் பகுதியில் விபத்துகளை குறைக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


புதுக்கோட்டை, மார்ச் 8: கீரனூர் பகுதியில் சாலை விபத்துகளை குறைக்க வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோடடை மாவட்டம் கீரனூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கீரனூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மாத்தூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் கட்டாயமாக காயத்துடன் உயிரிழப்பு இல்லாமல் தப்பித்து இருக்கலாம். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

 இதனால் வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதிய விழிப்புணர்வு இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட், சீட்பெல்ட் முக்கியத்துவம் மற்றும் மோட்டார் வாகன சட்ட விதிகள் தெரியவில்லை. எனவே விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன துறை இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கீரனூர் பொதுமக்கள் கூறியதாவது: விபத்துகளால் ஒரு உயிர் இறக்கும்போது அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சியும் அழிந்து விடுகிறது. விபத்துகளை குறைக்க இனியாவது போலீசார் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மோட்டார் வான சட்ட திட்டங்களை எளிதில் மக்கள் புரிந்து கொள்ளுமாறு கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். அந்த பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.

Tags : Keeranur ,
× RELATED நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு