×

சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்போற்சவம்


சீர்காழி, மார்ச் 8: சீர்காழி அருகே திருவெண்காடு புதன் கோயில் தெப்போற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகும். இந்த கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து மூன்று பொறிகள் முக்குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இத்தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக நவகிரகங்களில் ஒன்றாக விளங்கும் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் இங்கு அகோர மூர்த்தியாக தனி சன்னதி கொண்டு விளங்குகிறார். சுவேதாரண்யேஸ்வரர் தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு எதிரிகளை ராமன் சம்ஹாரம் செய்தான் என வால்மீகி ராமாயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மையை விளக்கியுள்ளார்.

இந்த கோயிலின் ஆண்டு இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 23ம்‘தேதி தொடங்கியது. விழாவின் 12ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தெப்போற்சவத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர். இதனை அடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை 4 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள். பக்தர்கள் செய்துள்ளனர்.

நாகை: நாகை வெளிப்பாளையத்தில் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரர்- ஆனந்தவல்லி அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோயில் பிரகாரத்தை சுற்றி கொடி ஊர்வலம் நடந்தது. இதை தொடர்ந்து தினந்தோறும் மாலை நேரங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. கடந்த 26ம் தேதி தேரோட்டமும், 27ம் தேதி நாகை புதிய கடற்கரைக்கு சுவாமிகள் சென்று மாசி மக தீர்த்தவாரி நடந்தது. மார்ச் மாதம் 5ம் தேதி புஷ்ப பல்லக்கு நடைெபெற்றது. நேற்றுமுன்தினம் (6ம் தேதி) இரவு தெப்போற்சவம் நடந்தது. தெப்போற்சவ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Swetharanyeswarar Temple ,
× RELATED திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் இந்திர பெருவிழா கொடியேற்றம்