×

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை சிங்கப்பெண் படையை காக்கவே மற்றொரு தனிப்படை வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் சுளீர்

நெல்லை: பாஜ முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நெல்லை வடக்கு மாவட்ட பாஜ அலுவலகத்தில் அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. சென்னையை சுற்றி அதிக தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அங்குதான் அதிகப்படியான பெண்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமை, போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய அரசு பொறுப்பேற்ற 40 நாட்களில் 20 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 15 போக்சோ வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. ஏன் குற்றங்களை தடுக்க முடியவில்லை. இதைக் கூறித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள். இதுபோன்ற பிரச்னைகளில் அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது. அவகாசம் கொடுத்தால் தமிழ்நாடு நாசமாகிப் போய்விடும்.

நல்ல திட்டங்களை பாஜ பாராட்டும் என்றாலும், மின்சாரம், சட்டம், ஒழுங்கு மோசத்தால் மக்கள் அன்றாடம் பாதிக்கப்படும் போது உடனடி நடவடிக்கை அவசியம். இதற்காக காலஅவகாசம் பார்க்கக் கூடாது. அரசு அமைத்துள்ள சிங்கப் பெண் அதிரடிப்படையை பாதுகாக்கவே தனிப்படை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. தமிழகத்தின் நிதிநிலையை கருத்தில் கொள்ளாமல் தவெக வாக்குறுதிகளை அளித்துள்ளது. முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில் இத்தகைய வாக்குறுதிகள் வழங்கி உள்ளார்.

தங்களிடம் ஒன்றும் இல்லை என்பதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மின்வெட்டு பிரச்னைக்கு பியூஸ் கேரியர் திருட்டை காரணம் காட்டுகின்றனர். அமைச்சர்கள் களத்தில் இறங்கி மக்கள் பணி செய்யாவிட்டால் தவெக அரசு காணாமல் போய்விடும். இதற்கு யாரையும் குற்றம்சாட்ட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Radhakrishnan Suleer ,Nella ,Former Union Minister ,Bon Radhakrishnan ,Northern District Baja ,Tamil Nadu ,Taweka ,Chennai ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...