×

சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நிறுத்த மறுப்பு: பயணிகள் அதிருப்தி


சென்னை: சென்னை எழும்பூர் - மதுரை இடையே வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் திருச்சி, கொடைரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று பிற்பகல் 12.30 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். அதேப்போல் மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இந்த ரயில்களில் வாரவிடுமுறை, தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். மற்ற நாட்களில் பயணிகள் இல்லாமல் காலியான இருக்கைளுடன் தான் இயக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த ரயில் திண்டுக்கல் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்காததே என்று பயணிகள் கூறுகின்றனர்.

எனவே திண்டுக்கல், தாம்பரம் ரயில் நிலையங்களில் தேஜஸ் ரயில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் கொடைரோடு ரயில் நிலையத்திற்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்வதற்கான எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. மற்ற ரயில் நிலையங்களை விட தாம்பரம் ரயில் நிலையத்தை தான் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம் மற்றும் கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர்,மேடவாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தை தான் அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே ஏப்ரல் 2ம் தேதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்வது போல் தாம்பரம் ரயில் நிலையத்திலும் தேஜஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘கடந்த 2019-20 ஆண்டில் 3 கோடியே 23 லட்சம் பேர் தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்தை விட 32 லட்சம் பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தங்களுடைய ஊர்களுக்கு சென்றுள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் இங்கு இறங்கி மற்ற பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் 60 சதவீதத்திற்கும் மேலான பயணிகள் இங்கிருந்து தான் ஏறி செல்கின்றனர். அதன்பிறகு தான் ரயில்கள் முழு இருக்கைகளுடன் செல்கிறது. பயணிகள் எண்ணிக்கையில் தெற்கு ரயில்வேயில் இரண்டாம் இடத்தில் உள்ள சென்னையின் மூன்றாவது முனையமான தாம்பரத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்ல வேண்டும். தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில்களை தவிர மற்ற அனைத்து ரயில்களும் நின்று செல்கின்றன.

இது மட்டுமில்லாமல் தாம்பரம் ரயில் நிலையம் தற்போது முனைய ரயில் நிலையமாக மாற்றப்பட்டு பல்வேறு நெடுந்தூர ரயில்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன. சென்னை விமான நிலையத்துக்கு வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் எளிதாக தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்து இந்த தேஜஸ் ரயிலை பிடித்து திருச்சி, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு விரைவாக சென்று விட முடியும். எனவே தேஜஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

* வீண் அலைச்சல்
மதுரையில் இருந்து வரும் தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தை இரவு 8.50 மணிக்கு கடந்து செல்கிறது. அதில் வரும் பயணிகள் அனைவரும் எழும்பூர் ரயில்நிலையம் சென்று, அங்கிருந்து மின்சார ரயில்கள் மூலம் மீண்டும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வர வேண்டியுள்ளது. அதன்பிறகு வாடகைக்கு கார் எடுத்து வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கூடுதல் நேரம் மட்டுமல்லாது, வீண் அலைச்சல் ஏற்படுகிறது. அதேப்போல், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 6 மணிக்கு ரயில் மதுரைக்கு கிளம்புவதால் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில்கள் மூலம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தான் தேஜஸ் ரயிலில் செல்ல வேண்டியுள்ளது. இல்லையென்றால் கார் புக்கிங் செய்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வீண் அலைச்சல், கூடுதலாக பணம் செலவாகிறது.

Tags : Chennai Egmore ,Madurai ,Tejas ,Tambaram ,
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!