×

நெல்லையில் பொதுக்குழு கூட்டம் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர் விடுதலை களம் போட்டி வக்கீல் ராஜ்குமார் பேச்சு

நெல்லை, மார்ச் 8:  தமிழர் விடுதலை களம் சார்பில் கட்சியின் 6ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் நெல்லை சந்திப்பில் நேற்று இரவு நடந்தது. தலைமை வகித்த நிறுவனத்தலைவர் வக்கீல் ராஜ்குமார் பேசுகையில், ‘‘பட்டியல் இனத்தில் உள்ள ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்ற எங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய அதிமுக அரசுக்கும், இதுகுறித்த சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித்தரும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜ கூட்டணியை  ஆதரித்து அதன் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வோம். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல் நாங்களும் முன்வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்.  இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வாய்ப்பு கிடைத்தால் தமிழர் களம் தேர்தலில் போட்டியிடும்’’ என்றார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்பாபு வரவேற்றார். நெல்லை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் பாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் மணிபாண்டியன், மாநகர மாவட்டச் செயலாளர் ஜெகன்பாண்டியன், மாவட்ட தலைவர் சுரேஷ்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர், மாநில பொருளாளர் நீதிராஜன், மாநில இளைஞரணி தலைவர் ஈஸ்வரபாண்டியன், மாநில துணை செயலாளர் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் மானூர் மகாராஜன், பாளை மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலப்பாளையம் பகுதி செயலாளர் சிவா நன்றி கூறினார்.

Tags : Tamil Liberation Front ,Rajkumar ,Nellai ,
× RELATED திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி