- என்எல்சி சௌடு
- மங்களம்பேட்டை
- என்எல்சி இந்தியா நிறுவனம்
- நெய்வேலி, விருத்தாசலம் தாலுக்கா, கடலூர் மாவட்டம்
- கொம்பாடிகுப்பம்
- ஊத்தங்கல்
மங்கலம்பேட்டை, ஜூன் 16: என்எல்சி சவுடு மண் படிந்து 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண்ணானது கொம்பாடிக்குப்பம், ஊத்தங்கால், கம்மாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை என்எல்சி மண்மேட்டில் மழைக்காலங்களில் ஏற்படும் மண் சரிவால் முப்போகம் விளையக்கூடிய சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுவதுமாக சவுடு நிலமாக மாறிவிட்டது. இதனால் பல வருடங்களாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், நிலத்தில் படிந்துள்ள சவுடு மண்ணை அகற்ற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் கோடை மழையால் வழக்கம்போல என்எல்சி மண்மேட்டில் இருந்து கரைந்து வெளியேறிய சவுடு மண் நிலங்களில் படர்ந்துள்ளது. இதையடுத்து புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று டிராக்டர் மூலமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கொம்பாடிக்குப்பம் கிராமத்தில் உள்ள மணல்மேட்டு பகுதிக்கு சென்று, பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டார். மேலும் விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர், \”என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கொடுத்து விவசாயிகள் ஒரு பக்கம் போராடி வரும் நிலையில், என்எல்சி சுரங்க மணல்மேட்டினால் முப்போகம் விளையக்கூடிய தங்களது சொந்த நிலம் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் எனவும், என்எல்சி நிர்வாகம் 10 நாட்களில், பாதிக்கப்பட்ட 300 ஏக்கர் விவசாய நிலங்களில் படிந்துள்ள சவுடு மண்ணை அகற்றி தர வேண்டும் எனவும், கடந்த 2019 முதல் தற்போது வரை விவசாயம் செய்யாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதில் மாநில பேரவை துணை செயலாளர் அருள் அழகன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கனகசிகாமணி, ஒன்றிய செயலாளர் சின்ன ரகுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
