×

ஆம்பூர், செஞ்சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

புதுச்சேரி, மார்ச் 8: புதுவையில் ஆம்பூர் சாலை மற்றும் செஞ்சி சாலையில் பயன்பாடற்ற ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக இடித்து அகற்றினர். புதுச்சேரி ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை வாய்க்கால் ஓரங்களில் சிலர் கடைகள் அமைத்து, அதனை வாடகைக்கு விட்டுவந்தனர். மேலும், சிலர் இடம் பிடிப்பதற்காக கடைகள் அமைத்திருந்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை, வருவாய்துறைக்கு புகார்கள் வந்தன. தினகரனில் இதனை குறிப்பிட்டு செய்தி வெளியானது.

இதையடுத்து சாலை பாதுகாப்புக்குழு சேர்மனும், புதுச்சேரி கலெக்டருமான அருண் நேற்று முன்தினம் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நீண்ட நாட்களாக பயன்பாடற்று சாலையில் நிறுத்தி வைத்துள்ள வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று நேரு வீதி- ஆம்பூர் சாலை சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. தாசில்தார் ராஜேஷ்கண்ணா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி இடிபாடுகளை வாகனங்களில் ஏற்றினர். இதில் 5க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

மேலும் சாலையில் நீண்ட நாட்களாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 2 ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று பொதுஇடத்தில் கட்டப்பட்ட சுவர்களும் இடிக்கப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொது இடத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டி, அதனை வாடகைக்கு விடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ambur ,Ginger Road ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...