×

வைத்திக்குப்பத்தில் நாளை மாசிமக தீர்த்தவாரி விழா

புதுச்சேரி, மார்ச் 8: புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் நாளை மாசிமக தீர்த்தவாரி விழா நடக்கிறது. இதையொட்டி 30 இடங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிப்பில் ஈடுபட போலீசார் முடிவு செய்துள்ளனர். கொரோனா அச்சுற்றுத்தல் இருப்பதால் 4 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.  புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆண்டுதோறும் மாசிமக தீர்த்தவாரி விழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்தாண்டு மாசிமக தீர்த்தவாரி விழா நாளை (9ம் தேதி) காலை நடக்கிறது. இதில் செஞ்சி ரங்கநாதர், தீவனூர் விநாயகர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மயிலம் முருகன் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் பங்கேற்கின்றன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திண்டிவனம் அலர்மேல் மங்கா சமேத சீனிவாச பெருமாளும் நாளை காலை எழுந்தருளுகிறார். பின்னர் மாலை 3 மணியளவில் அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தை சென்றடைகிறார். அன்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. மறுநாள் 10ம் தேதி சிறப்பு திருக்கல்யாண வைபவம், மாலை 6 மணிக்கு சாமி திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 11ம் தேதி காலை சுதர்சன ஹோமம் நடக்கிறது. முன்னதாக, இன்று (8ம் தேதி) 100 அடி ரோடு சாரதாம்பாள் கோயிலில் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது என புதுச்சேரி அலர்மேல் மங்கா சமேத சீனிவாச பெருமாள் மாசிமக கடல் தீர்த்தவாரி கமிட்டி கவுரவ தலைவர் பொன்னுரங்கம் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் வைத்திக்குப்பம் மாசிமக தீர்த்தவாரி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வைத்திக்குப்பம் பச்சைவாழியம்மன் கோயிலில் கிழக்கு எஸ்பி மாறன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போலீசார் மற்றும் விழாக்குழுவினர் பங்கேற்றனர். விழாவை அமைதியான முறையில் நடத்துவது, கடலோர காவல்படை சார்பில் படகுகளில் போலீசார் ரோந்துப்பணி, பக்தர்கள் கடலில் இறங்கி குளிப்பதை தடுப்பது, 30 இடங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதேபோல், கொரோனா வைரஸ் அச்சறுத்தல் இருப்பதால் பக்தர்கள் ஒருவரோடு ஒருவர் உரசி செல்வதை தடுப்பது, கூட்டமாக செல்வதை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Mass Tirthawari ceremony ,Vaithikkuppam ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...