×

மாதிரி மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தி குமரியில் 90 இடங்களில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாணவிகள், பொதுமக்கள் ஆர்வம்

நாகர்கோவில், மார்ச் 6: குமரியில் நேற்று 90 இடங்களில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம், வாக்களிப்பது எப்படி? என்பது பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடந்தது. இதில் மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று ஆர்வமுடன் வாக்குகளை பதிவு செய்தனர்.  சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பொது இடங்களில் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாதிரி மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை பொது இடங்களில் வைத்து வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை விளக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அச்சத்தை விலக்கிக்கொள்ளவும், அவர்கள் எளிதாக தேர்தல் நாளன்று வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்கும் விதத்தில் இந்த விழிப்புணர்வு உதவும் என்று  தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதியில் 15 இடங்கள் வீதம், 6 தொகுதிகளிலும் மொத்தம் 90 இடங்களில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து நேற்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், கல்லூரிகள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேர்தல் அலுவலர்கள் இந்த விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையத்தில் நடந்த முகாமில், ஏராளமான கல்லூரி மாணவிகள் வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். அவர்களுக்கு வாக்களிப்பது எப்படி? நமது வாக்கு சரியாக பதிவு ஆகி இருக்கிறதா? என்பதை எப்படி அறிய வேண்டும் என்பது பற்றி விளக்கமளித்தனர். குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இரு வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்காக தனித்தனி இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் என்றும், அதிகாரிகள் விளக்கினர். மாணவ, மாணவிகள் மட்டுமின்றி வயதானவர்கள், வியாபாரிகள் பலரும் மாதிரி மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்க ஆர்வமாக வந்தனர்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...