விருத்தாசலம், ஜூன் 15: விருத்தாசலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத நேரு, காந்தி மற்றும் போலீசார் விருத்தாசலம் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செம்பளக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்த ராஜவேல் மகன் அல்லிமுத்து (45) மற்றும் ராஜாங்கம் மகன் சேகர் (50) ஆகியோர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
