×

அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகல்: எடப்பாடிக்கு பரபரப்பு கடிதம்

சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி நேற்று அதிரடியாக அறிவித்தார். பிரபல நடிகை கவுதமி, 1997ல் பாஜவில் இணைந்தார். அவர் பாஜவில் இளைஞரணி துணை தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். தன் சொத்து தொடர்பான பிரச்னையில் பாஜ தனக்கு உதவவில்லை எனக்கூறி கடந்த 2023ம் ஆண்டு பாஜவில் இருந்து விலகினார். பின்னர் 2024ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் போட்டியிட கவுதமி வாய்ப்பு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கட்சி தலைமை வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி நேற்று அதிரடியாக அறிவித்தார். இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் நேற்று கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

அதில் கூறியிருப்பதாவது:
இன்று (நேற்று) முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட அதிமுக செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் நகர செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி அதிமுகவில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பெரும்பாலானோர் விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகை கவுதமியும் விலகியுள்ளது அதிமுக தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Gautami ,Atamugav ,Edapadi ,Chennai ,Bajaj ,Vice President of Youth ,National Executive Committee ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...