×

அட்ரஸ் இல்லாமல் போஸ்டர் அடித்தால் ஆப்செட் உரிமம் ரத்து தேர்தல் ஆணையம் கெடுபிடி

பழநி, மார்ச் 8: அட்ரஸ் இல்லாமல் போஸ்டர் அடித்தால் ஆப்செட் உரிமம் ரத்து செய்யப்படுமென தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப். 6ம் தேதி நடைபெற  உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை துவங்கும் முன்பே தேர்தல் ஆணையம் தனது தேர்தல் பணியை துவங்கி விட்டது. பல்வேறு தரப்பிலும் கெடுபிடி காட்டி வரும் தேர்தல் ஆணையத்திடம் தற்போது சிக்கியிருப்பது அச்சகங்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உரிய விலைபட்டியல் இன்றியும், அச்சிடுவோர் மற்றும் வெளியிடுவோர் விபரம் இன்றியும் போஸ்டர்களும், நோட்டீஸ்களும் தேர்தலில் வேட்பாளர் செலவு கணக்கிற்கு பயந்து அச்சிடப்பட்டு வந்தன.

தற்போது தேர்தல் ஆணையம் அச்சகங்களுக்கு பல அதிரடி நிபந்தனைகள் விதித்துள்ளன. இதனால் அச்சகங்களின் உரிமையாளர்கள் ஆடிப்போய் உள்ளனர். இதன்படி அச்சக உரிமையாளர் போஸ்டர் அடிக்க வரும் நபர்களிடம் வேட்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னரே அச்சடிக்கிறேன் என்று வேட்பாளரின் அனுமதி கையெழுத்துடன் உறுதிமொழி பத்திரத்தை பூர்த்தி செய்து அதில் கையெழுத்து இட வேண்டும். அதில் இரண்டு சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும்.

இதனை இரண்டு நகல்கள் எடுத்து ஒன்றை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதனுடன், விளம்பரத்தின் அளவு, விளம்பர வடிவமைப்பு செலவு, அச்சிட ஆகும் செலவு, அச்சிடுவோரின் விபரம் மற்றும் வெளியிடும் அச்சகத்தின் விபரம் ஆகியவை இடம்பெறும் பிறசேர்க்கை படிவத்தையும் பூர்த்தி செய்து இணைத்து வழங்க வேண்டும். இவ்விபரங்களை அச்சிட்ட 2 நாட்களுக்குள் அலுவலகத்தில் அச்சகதாரர்கள் ஒப்படைக்க வேண்டும். இதனால் அச்சக உரிமையாளர்கள் ஆடிப்போய் உள்ளனர்.

Tags : Election Commission ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...