×

பனி மற்றும் வெயில் காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனம் பசுமையை இழந்தது

ஊட்டி, மார்ச் 8: பனி மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகள் பசுமை இழந்து காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை பெய்யும் நாட்கள் கடந்த ஜனவரியை தாண்டி பொங்கல் வரை நீடித்தது. இதன் காரணமாக பனிப்பொழிவு தள்ளி போனது. ஜனவரி மாத இறுதியில் இருந்து பனிப்பொழிவு நிலவி வருகிறது. உறைபனி பொழிவு காரணமாக புல்வெளிகளின் பனி படர்ந்து காணப்பட்டது. ஊட்டியில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியசை தொட்ட நிலையில், அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி வரை சென்றது. உறைப்பனியின் தாக்கம் கடுமையாக உள்ளது.

 இதனால், வனப்பகுதிகளில் உள்ள சிறிய மரங்கள் மற்றும் செடி, கொடிகளும் உறை பனியில் கருகி பசுமை இழந்துள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, சீகூர், சிங்காரா, ஆனைகட்டி, பொக்காபுரம் உள்ளிட்ட காப்பகத்தின் பெரும்பான்மையான வனப்பகுதிகள் பனியால் கருகி காய்ந்து பசுமையை இழந்துள்ளன. இதனால் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.வனங்களில் உள்ள செடி கொடிகள் கருகியுள்ளதால் காட்டு தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காட்டு தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளிலும் உறைபனி காரணமாக செடி கொடிகள் காய்ந்து கருகியுள்ளன. காட்டு தீ ஏற்படும் அபாயமுள்ளதால் வனத்தை ஒட்டிய பகுதிகளில் தீ மூட்டுவதோ, புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவோ வேண்டாம் என சுற்றுலா பயணிகள், பொதுமக்ககளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு தீ ஏற்படுவதை தடுக்க நாள் தோறும் கண்காணிப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Mudumalai Tiger Reserve ,
× RELATED நீலகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி