முதலாளித்துவத்தை வளர்ப்பதற்காக பாஜ-அதிமுக கூட்டணி உருவாகி உள்ளது

ஈரோடு, மார்ச் 8: பாஜ-அதிமுக மதவெறி பாசிச கொள்கைக்காகவும், முதலாளித்துவத்தை வளர்ப்பதற்காக மட்டுமே இந்த அணி உருவாகி உள்ளது என ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுசெயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். ஈரோடு பெரியார் மன்றத்தில் இந்திய கம்யூனிஸ் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவையொட்டி நினைவேந்தல் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு, தா.பாண்டியன் உருவப்படத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய நாட்டில் மதவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ். எனும் அமைப்பின் கருவியாக பாஜ செயல்பட்டு வருகிறது. நம் நாட்டில் பாஜ சாதி கட்டமைப்பை காப்பாற்றி ஒவ்வொரு சாதியையும் மத வெறி அரசியலுக்கு உட்படுத்த முயற்சிக்கிறது. அம்பேத்கர் அளித்த இந்திய சட்டம், மதசார்பற்ற குடியரசு நாடு என இலக்கணப்படுத்துகிறது. ஆனால், மோடி ஆட்சி அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்தெறிகிறது. இதனை தடுத்து நிறுத்தி நாட்டையும்,  அரசியல் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும்.

 மத வெறி சக்திகள் தேர்தலில் வெற்றி பெற கூடாது. மதசார்பற்ற அணி வெற்றி பெற வேண்டும். மதவெறி பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும். இந்த ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகின்றன. இட ஒதுக்கீடு இருப்பதால்தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தான் முதலில் இருந்து இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இதை தகர்த்தால் சமூக நீதி இருக்காது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொள்கையை இந்த அரசு பின்பற்றுகிறது.

அம்பானி, அதானி கொள்ளையடிக்க மோடி ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்தியாவை ஆட்டி படைக்கும் மதவெறி பாசிசம் ஒரு சவாலாக இந்த தேர்தலில் உள்ளது. பாஜ, அதிமுக மதவெறி பாசிச கொள்கைக்காகவும், முதலாளித்துவம் வளர்க்கவும் இந்த அணி உருவாகி உள்ளது. பாட்டாளி என பெயர் வைத்திருக்கும் கட்சி உட்பட பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள அனைவருக்கும் ஒரு கேள்வி. மக்களின் நலனுக்கான கூட்டணியா? இது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மதசார்பற்ற திமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். அந்த அணி வெற்றி பெறுவது தான் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தா.பாண்டியன் நினைவாக ‘வரலாறு நம்மை அடையாளம் காட்டும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தா.பாண்டியன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மோகன், துளசிமணி, மூத்த வழக்கறிஞர் திருமலைராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>