×

அதிகாரி விளக்கம் செல்போன் டவர் அமைத்தால் தேர்தலை புறக்கணிப்போம் பேராவூரணி நகர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை

பேராவூரணி, மார்ச் 7: பேராவூரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கக் கூடாது என வலியுறுத்தியும், மீறி அமைத்தால் தேர்தலை புறக்கணிக்க போவதாக குடியிருப்பு பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி பேரூராட்சி 7வது வார்டு பொதுமக்கள் பேராவூரணி தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: பேராவூரணி பேரூராட்சி 7வது வார்டில் ஆனந்தவள்ளி வாய்க்கால் கரையில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ள பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க திடீர் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்கான தளவாட சாமான்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த செல்போன் டவர் அமையும் இடத்தை சுற்றிலும் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்த செல்போன் டவர் அமைவதால் அதில் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக முதியவர்கள், நோயாளிகள், சிறு குழந்தைகள் போன்றோர் மிகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், மக்களின் கருத்தை அறியாமல், இந்த செல்போன் டவர் அமைக்கப்படுமானால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் அனைவரும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம். எனவே உடனடியாக செல்போன் டவருக்கான அனுமதியை ரத்து செய்து பாதிக்கப்பட இருக்கும் பொதுமக்களுக்கு தகுந்த நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Peravurani Nagar Residential Area Public Warning ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ