×

பொதுமக்கள் பங்கேற்பு அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு

திருமயம், மார்ச் 6: அரிமளம் அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புதுக்கோட்டையில் இருந்து கே.புதுப்பட்டி செல்லும் சாலையில் அரிமளம் அடுத்த சேத்து மேல் செல்ல அய்யனார் கோயில் செல்லும் சாலையை சுள்ளாம்பட்டி, தேமக்கம்பட்டி, மணப்பட்டி, கோவில்வாசல், இசுகுபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 4 கிலோ மீட்டர் சாலையில் 2 கிலோ மீட்டர் சாலை அரிமளம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாலை புதுப்பித்து பல ஆண்டுகளான நிலையில் தொடர் பராமரிப்பு இல்லாததால் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இது ஒருபுறமிருக்க மீதமுள்ள 2 கிலோ மீட்டர் ஊராட்சி சாலையில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதை சரி செய்ய அப்பகுதி மக்கள், பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இநநிலையில் சேதமடைந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நேற்று முன்தினம் காலை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அரிமளம்- கே.புதுப்பட்டி சாலையில் அய்யனார் கோயில் ஆர்ச் எதிரே 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக மணபட்டியை சேர்ந்த கண்ணன், சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், ஊராட்சி உறுப்பினர் பலனியப்பன் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...