×

சாக்கு பற்றாக்குறையால் 16,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேக்கம்

தரங்கம்பாடி, மார்ச் 7: தில்லையாடி நேரடி கொள்முதல் நிலையத்தில் சாக்குகள் பற்றாக்குறையால் 16,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் சாக்குகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த 16 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து விவசாயி கலியப்பெருமாள் கூறியதாவது: தில்லையாடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தில்லையாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. கொள்முதல் செய்யப்படாததற்கு சாக்கு பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது.

கொள்முதல் நிலையத்தில் கைவசம் உள்ள சாக்குககள் கிழிந்தும், ஓட்டையாகவும் இருப்பதால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. விவசாயிகள் கொண்டு வந்து வைத்துள்ள நெல் கொள்முதல் செய்ய 16 ஆயிரம் சாக்குகள் தேவையென கூறப்படுகிறது. மேலும் கொள்முதல் செய்த 11 ஆயிரம் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லப்படாமல் உள்ளன. இந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய்களும் இல்லை. திடீர் மழை வந்தால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி விடும் அபாயம் உள்ளது. எனவே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய 16 ஆயிரம் சாக்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கொள்முதல் செய்து தேங்கி கிடக்கும் 11 ஆயிரம் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது