சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்

கரூர், மார்ச். 7: சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து மண்டல அலுவலர்களும் முழுஅர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என கரூரில் நடந்த பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து, கூட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்,சட்டமன்ற பொதுத்தேர்தல் பணியில் ஈடுபடக் கூடிய அனைத்து மண்டல அலுவலர்களும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகள் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் மண்டல அலுவலர்கள் உங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கு இந்த பயிற்சியை வழங்க உள்ளீர்கள்.

எனவே, இங்கு சொல்லப்படுகிற அனைத்து தகவல்களையும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். கூறப்படும் தகவல்களில் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்டு தெளிவு பெற வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையத்தில் உள்ள முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திக் காட்டப்பட வேண்டும். சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் எனப்படும், வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அவருக்கு மட்டும் காட்டும் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. எனவே, இந்த கருவியை கையாளும் முறை குறித்தும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் பொருட்களை முறையாக பெற்று அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும், கொரோனா தொற்று நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சானிடைசர்கள், உடல்வெப்பத்தை அளவிடும் தெர்மல் ஸ்கேனர், கையுறைகள், கவச உடைகள் உட்பட அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை நேரில் சென்று பார்வையிட்டு குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி, போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், நான்கு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>